கங்னம் நடனத்தைக் கண்டுபிடித்த கொரிய டான்ஸரின் கார் பஸ் மீது மோதி விபத்து
கொரியாவைச் சேர்ந்த பிரபல பாடகரும், உலகப் புகழ் பெற்ற கங்னம் நடனத்தை கண்டுபிடித்தவருமான சையின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமுற்றது. சீனாவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தி்ல் பாடகர் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வியாழக்கிழமை பாடகர் சை கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாண விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு வளைவில் கார் திரும்பியபோது பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குப் பின்னர் பாடகர் சை வேறு ஒரு காரில் ஏறிச் சென்றார். ஹாங்ஸோ என்ற இடத்தில் ஒரு பார் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சீனா வந்துள்ளார் பாடகர் சை.



