2000 வருட பழமையான பாத் ரூம் கண்டுபிடிப்பு.. ஜெருசலேமில்
புராதன நகரான ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் பயன்படுத்திய குளியல் அறை ஒன்று, ஒரு வீட்டின் அடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் அருகே உள்ள இன்கரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஓரியா. இவர் தமது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தமது வீட்டுக்கு அடியில் ஒரு ரகசிய அறை இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதையடுத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரியாவின் வீட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அந்த ரகசிய அறை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட குளியலறை எனத் தெரிய வந்துள்ளது.
அந்தக் குளியறையில் உள்ள பொருட்கள் கற்களால் வியத்தகு வகையில் செய்யப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதாள அறைக்குச் செல்லும் வழியில் அழகான கற்களால் ஆன படிக்கட்டுகளும் காணப்பட்டன. இயேசுநாதர் காலத்தில் கட்டப்பட்ட அறை என்பதால் இது பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
மிக்வா என்று இந்த அறைக்குப் பெயராம். கற்களால் ஆன பாத்திரங்கள், அழகிய சுவர் வேலைப்பாடு உள்ளவை அதில் காணப்படுகின்றன.
ரோமானியர்கள் ஜெருசலேம் நகரை தாக்கி அழிப்பதற்கு முன்பு இந்த பாத்ரூம் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே பல வரலாற்றுத் தகவல்களையும் இது தாங்கி நிற்கிறது.
இன்கரம் நகரமானது மிகவும் புராதன பகுதியாகும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொன்மையான பகுதி. இங்குதான் புனித ஜோன் பிறந்தார். தற்போது இது ஜெருசலேம் நகரின் ஒரு பகுதியாக உள்ளது.



