கண்ணில் பட்ட பெண்ணையெல்லாம் கட்டிப்பிடித்த நேபாள அமைச்சர் ராஜினாமா..
நேபாள விவசாயத்துறை அமைச்சர் ஹரி பிரசாத் பரஜுலி ஒரு வழியாக தனது பதவியை ராஜினிமா செய்து விட்டார். கண்ணில் பட்ட பெண்களையெல்லாம் கட்டிப்பிடித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து இவர் பதவி விலகியுள்ளார். ஹரி பிரசாத் பரஜுலி, செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் நடந்த வருடாந்த நெல் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் போய் ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்தார். பாட்டிகளைக் கூட அவர் விடவில்லை என்பதுதான் விசேடம்.
ஹரி பிரசாத்தின் செயலால் அப்பெண்கள் பெரும் தர்மசங்கடமாகிப் போனார்கள். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரி பிரசாத்தின் செயல் வக்கிரமமானது, பாலியல் கொடுமை இது என்றும் சர்ச்சைகள் வெடித்தன. இதுகுறித்து பரஜுலி சார்ந்த ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சூர்ய தாப்பா கூறுகையில், அமைச்சரின் செயல் வரம்பு மீறியுது, அநாகரீகமானது. அவர் தனது எல்லையைக் கடந்திருக்கக் கூடாது.
பொதுமக்கள் மத்தியில் அவரது செயல் கண்டனத்தைக் கிளப்பியதால் தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என்றார் தாப்பா. ஹரியின் ராஜினாமாவை பிரதமர் சுஷில் கொய்ராலா உடனடியாக ஏற்றுக் கொண்டார். நேபாளத்தில் பெண்கள் பொது இடங்களில் இதுபோன்ற பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவதாக ஏற்கனவே ஒரு கவலை நேபாளத்தில் உள்ளது. இந்த நிலையில் அமைச்சரே இப்படி தாறுமாறாக கட்டி அணைத்து பரபரப்பைக் கிளப்பியது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.



