Breaking News

போலீஸாரின் சம்பளம் 40 வீதத்தால் அதிகரிக்கும் - 22 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறவும் அனுமதி !

போலீஸாரின் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆதற்கான அமைச்சரவையினதும் சம்பள ஆணைக்குழுவின் அனுமதிகள் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

தேர்தலின் பின்னர் பதவிக்கு வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதற்கான ஒதுக்கீடுகளைப் பெற்று 2016 ஜனவரி தொடக்கம் அது நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். 

பொலீஸாரின் சம்பளம் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதனால் விசேடமாக இதற்காக அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட அனைத்துப்ப பிரிவினதும் அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் ரி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்தார்.

பொலீஸார் 12 மணிநேரம் சேவையாற்றுவதோடு அவர்களது இந்த அர்ப்பணிப்புக்காக வரலாற்றில் இதுவரை எந்த அரசாங்கமும் அதிகரிக்காத அளவு சம்பளத்தினை அதிகரித்தருப்பது தற்போதைய அரசாங்கமாகும். 

இதற்கு மேலதிகமாக 22 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் தமது விருப்பின் அடிப்படையில் ஓய்வு பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. தற்போது சுமார் ஏழாயிரம் போர் ஓய்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 

எதிர்காலத்தில் பொலீஸாருக்கான 17000 வெற்றிடங்கள் ஏற்படவுள்ளன. ஆவற்றிற்காக புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெறவுள்ளன.

அரசாங்கத்தின் எவ்வித தலையீடுகளுமின்றி பொலீஸாரின் பதவியுயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட அனைத்தும் நடைபெறுவதாக தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க எதிர்காலத்தில் பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு அவரவர் வதியும் மாகாணங்களுக்கு இடமாற்றங்களை வழங்கி சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். பொலீஸாருக்கு காப்புறுதி முறைமையொன்று வழங்கப்படவுள்ளதோடு பொலீஸாரின் சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக பொலீஸ் பெரக்குகளிலிலிருந்து சேவையாற்றச் செல்வோருக்கு தனியான கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  

மேலும் பொலீஸ் வைத்தியசாலைக் கிளைகளை நாடுமுழுவதிலுமுள்ள பிரதான வைத்தியசாலைகளுடன் இணைத்து கொழும்புக்கு வெளியேயுள்ள பிரதேசத்திலுள்ள பொலீஸ் உத்தியோகத்தர்களும் அதன் மூலம் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சாந்தர்ப்பம் வழங்கப்படும்.

சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலீஸார் தொடர்பில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இத்தகவல்களை வெளியிட்டார். 
நமது நிருபர்