Breaking News

தூங்கியபடியே அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து போய், மலை ஏறி, கடலிலும் இறங்கிய பெண்

மேரி லார்ட் கதை சற்று கவலைக்கிடமானதுதான். தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர். ஆனால் இவரது இந்த வியாதி பெரும் சிக்கலில் கொண்டு போய் விடப் பார்த்தது சமீபத்தில். அதாவது தூக்கத்திலேயே அரை கிலோமீட்டர் தூரம் வரை வீட்டை விட்டு வெளியேறி நடந்த இவர் மலை ஒன்றில் ஏறி, கீழே இறங்கி அப்படியே கடலில் போய் கால் வைத்துள்ளார். அந்த சமயத்தில் கடற்கரையில் இருந்த ஒருவர் பார்த்து மேரியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அதனால் உயிர் தப்பினார் மேரி. 39 வயதான மேரியைக் காப்பாற்றியவர் ஒரு உணவு விடுதியின் போர்ட்டர் ஆவார்.
மேரி லார்ட் சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்துள்ளார். அவரது வீட்டுக்கு அருகில் சிறிய மலைப் பகுதியும், அதையொட்டி கடலும் உள்ளது. அப்படியே தூக்கத்தில் நடந்தவர் பாறைகள் நிறைந்த அந்த மலையில் ஏறி அப்படியே கீழே இறங்கியுள்ளார். பின்னர் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார். கடலில் கால் வைத்து கொஞ்ச தூரம் வரை போனவர் கடலில் மூழ்கும் நிலைக்குப் போன பிறகுதான் உணர்ச்சி வந்து விழித்துள்ளார். தப்பாக வந்து விட்டோம் என்று நினைத்த அவர் கடலிலிருந்து வெளியேற வர முயற்சித்துள்ளார். இந்த நிலையில் அவரைப் பார்த்து விட்டு அருகிலிருந்த உணவு விடுதியின் போர்ட்டர் ஒருவர் வேகமாக ஓடி வந்து மேரியை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளார். இதனால் மேரி உயிர் பிழைத்தார். மேரியைக் காப்பாற்றிய போர்ட்டர் லீ சியர்லே உடனடியாக அவசர கால போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸும் விரைந்து வந்தது. பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேரியின் உடம்பு குளிரான கடல் நீரில் இருந்ததால் வெப்பநிலை குறைந்து ஹைபோதெர்மியா என்ற நிலைக்கு வந்துள்ளது. தான் நடந்தபோது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் மேரி. நட்சத்திரம் ஒன்று கண்ணில் பட்டதாகவும், கனவு போல இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.