Breaking News

சாதிக்குமா இளம் இந்தியா: ஜிம்பாப்வேயுடன் முதல் மோதல்



இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று துவங்குகிறது. ரகானே தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இதில் எழுச்சி பெறும் என நம்பப்படுகிறது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, ரெய்னா, அஷ்வின் என ‘சீனியர்கள்’ அடங்கிய இந்திய அணி, வங்கதேச மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரை இழந்தது. இதனால் இவர்களுக்கு ஓய்வு தரப்பட்டு, ரகானே தலைமையில் 7 முன்னணி வீரர்கள் இல்லாமல் இன்று இந்திய அணி களமிறங்குகிறது. அணியின் துவக்கத்திற்கு முரளி விஜயுடன் இணைந்து ரகானே வருவாரா அல்லது உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. தவிர, அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி என பலர் இருப்பதால் யார் எந்தெந்த இடத்தில் களமிறங்குவர் என்று இன்று தான் தெரியும். இவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்களுக்கு இந்திய ‘சீனியர்’ அணியில் ‘மிடில் ஆர்டரை’ பலப்படுத்த வாய்ப்பு வரும்.
பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரகானே (55 போட்டி, சராசரி 30.63 ரன்) உள்ளதால் இன்று பொறுப்பான ஆட்டத்தை தர முயற்சிக்கலாம்.