மரச் சின்னத்தில் ஆசனமொன்றை வெல்வது மிகப் பெரும் கௌரவமாகும் - காத்தான்குடியில் றஊப் ஹக்கீம் உறுதி
மரச் சின்னத்தில் ஆசனமொன்றை வெல்வது மிகப் பெரும் கௌரவமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி ஆகியன இணைந்து வெள்ளிக்கிழமையன்று (07) ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் றஊப் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்திற்கு ஜனவரி 8ஆம் திகதி நாம் ஏற்படுத்திய யுகப் புரட்சியை பர்துகாக்கும் முயற்சியின் நிச்சமாக அமையப்போகிற ஒரு பெரும்பான்மை அரசில் எங்களுடைய வகிபாகத்தை தீர்மானிக்கிற மிகப் பிரதானமான ஒரு போட்டி என்பதை நாங்கள் எல்லோரும் தெளிவாக அடயாளம் கண்டிருக்கிறோம்.
கல்குடாவிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு போட்டி, இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வெற்றிலைச் சின்னத்தோடு போட்டி என்றுதான் ஆரம்பத்திலே ஆரம்பித்தோம் ஆனால் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் எங்களோடு சேர்ந்த பின்னணியில் கட்சிக்காரர்கள் மத்தியில் அது சம்பந்தமான விஷயங்களில் ஒரு திருப்தியை ஏற்படுத்துகிற வேலையை கட்சித் தலைமை செய்யவேண்டியிருந்தாலும், இது நாம் வகுத்தாகவேண்டிய வியூகம் என்பதை எல்லோரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்க ரீதியாக எங்களிடையே சில தனித்துவ குனாம்சங்கள் இருக்கத்தக்கதாக நாங்கள் நேச சக்தியாக இணைந்து இந்த மண்ணிலே இருக்கின்ற அரசியல் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். காத்தான்குடி என்பது ஒரு சாதாரண இடமல்ல. ஒண்ணரை கிலோமீற்றர் பரப்பளவிற்குள் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் வணிகத் திறனை ஒடுக்கி வைத்திருக்கும் இடமாகும்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் கல்குடாவிலே வாழைச்சேனையின் இன்று நடந்த அந்த பாரிய மாநாட்டுக்குப் பிறகு ஒரு செய்தியை கல்குடாவுக்கு தெளிவாக சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கே கிடைக்கும்.
எமது பிரதம அமைச்சர் அடுத்த அரசின் வழிகாட்டியாக இருக்கப்போகிற ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று உளவுத்துறை தன்னுடைய செய்தியை சொல்லியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்தில் கேட்டிருந்தால் இரண்டு ஆசனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெல்லக்கூடிய நிலவரம் உருவாகியிருக்கலாம். அதைவிடவும் மரச் சின்னத்திலே மரியாதையாக இந்த மண்ணிலே ஆசனத்தை வெல்கிறோம் என்பதை விட பெரிய கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்த மண் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பூர்வீக மண். மில்லத் பாலிகா பாடசாலையில் நாம் ஆரம்பித்த இந்த இயக்கம் இடைநடுவிலே என்ன நடந்தது என்பதைப் பற்றி பல தடவைகள் நாம் எங்களுக்குள்ளே பேசியிருக்கிறோம். தேவையில்லாத ஒரு பிரதேசவாதம், ஊர்வாதம் இவையெல்லாம் தலைதூக்குவதற்கு காரணமாக அமைந்தவர்கள், இந்தக் கட்சியிலேயிருந்து அரசியல் அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டுவந்து நாங்கள் ஆசனங்களில் அமர்த்தியவர்கள் காத்தான்குடியில் ஒன்றும் கல்குடாவில் இன்று ஒன்றுமாக இந்தக் கட்சியை கருவறுக்க அவர்களால் என்ன எத்தனத்தை செய்தாலும் அவை எதுவுமே பலிக்காது என்ற பலமான நிலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடைய அரசியல் பிரவாகம் இன்று படையெடுத்து வாழைச்சேனையிலே மிகப் பிரமாண்டமான ஒரு கட்சி மாநாட்டை நாங்கள் நடாத்தி அதிலே கட்சிப் போராளிகள் மிகுந்த பூரிப்படைந்தனர்.
எந்த ஊரக இருந்தாலும் சரி அவர்கள் 12,000 ஐத் தாண்ட வேண்டும். தாண்டினால் ஆசனம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையோடு ஈடுபடலாம். மூன்று ஊர்களிலும் அதே நம்பிக்கை தாராளமாக ஏற்படுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அது எங்கு கிடைத்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடைய இந்த இயக்கம் அது மட்டக்களப்பு மண்ணிலே அது வாழ்கிறது என்கிற பூரிப்போடு அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காத்தான்குடியைப் பொறுத்தமட்டில் ஊருக்கு ஒரு எம்.பி வேண்டும் என்ற போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். கல்குடாவிலும் ஒட்டியிருக்கிறார்கள் ஊருக்கு ஒரு எம்.பி இருந்து வேலைகள் செய்யப்பட்டுத்தான் இருக்கிறது. ஆனால் அடுத்து வருகின்ற அரசாங்கத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடைய தலைமை அதைவிடவும் அதிகமான வேலைகளை செய்வதற்கு நாம் ஏற்கன ஆரம்பித்திருக்கிறோம். பீச் பார்க் என்ற திட்டத்தை ஆரமபித்திருக்கிறோம். விரைவிலே அதற்கென 8 மில்லியன் ரூபா ஒதுக்க இருக்கிறோம். ஆதனை செய்து முடிப்பது மாத்திரமல்ல 105 மில்லியன் டொலர் செலவில் முழுக் கிழக்கு மண்ணினும் ஒரு இடத்திலும் இல்லாத ஒரு முஸ்லிம் பிரதேசத்திலும் இல்லாத ஒரு கழிவு நீர் தொகுதியொன்றை காத்தான்குடியிலே அமைப்பதற்கு நான் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றேன்.
காத்தான்குடியிலே இருக்கின்ற சன நெருக்கடி காரணமாக ஒவ்வொரு வளவிலும் கழிவறைகளும் கிணறுகளும் என்றிருக்கிற நிலையில் நிலத்தடி நீர் மாசுபடுகிற மாபெரிய அபாயம் இருக்கிற நிலையில் இதைக் குறைப்பதற்கு இருக்கின்ற முக்கியமான விஷயமாக கழிவு நீர் தொகுதியொன்று இந்தப் பிரதேசத்திற்கு அமைய வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திலெடுத்து அமைந்திருக்கிற நல்லாட்சிக்கான அரசாங்கம் நாங்கள் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்ற போது அவற்றை செயற்படுத்துவதற்கு திறந்த அடிப்படையில் அது செய்யப்பட வேண்டும் என்ற காரணத்தினால் இது இன்னும் பிற்போடப்படலாம் என்ற ஆபத்து இருந்த போதிலும் கூட பிரதம மந்திரியுடன் கதைத்து நாங்கள் காத்தான்குடியில் அவசரமாக ஏதாவதொன்றை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரத்தியேகமாகப் பேசி திறைசோரியிலே பலவிதமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அதை பெறுவதற்கான முயற்சியில் வெற்றிகண்டிருக்கிறோம் என்பதை பொருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான யூ.எல்.எம்.என்.முபீன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட்லெப்பை உள்ளிட்ட வாக்காளர்கள் பலரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ.அப்துல் நஸார்



