இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை
பிபிசி தமிழோசைக்கு தெரிவிக்கையில் "இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை" என நீதியமைச்சரும், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதியாக தடுத்து வைக்கப்படிருந்த அரசியல் கைதி சரத் பொன்சேகாவே எனவும் அவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையால் தற்போது அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட வெடிகுண்டு வைத்தல், கொலை செய்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும், விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் அரசியல் கைதிகளாகவே கருதவேண்டும் என சில நாட்களுக்கு முன் முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, பிபிசிக்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



