கணவரின் தலையை துண்டித்து கொலை செய்த பெண்..!!
உளவியல் நிபுணரான பெண்ணொருவர் தனது கணவரின் தலையை துண்டித்து கொலை செய்ததுடன் சடலத்தை துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது. 40 வயதான மரியா அலஜென்ரா கசோ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் தனது கணவரான அலன் கரேரா கியூலர் (41) என்பருடன் மெக்ஸிகோவின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் வசித்து வந்தார். தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வந்தார் எனவும் இதனால், ஆத்திரமடைந்து அவரை தான் கொலை செய்ததாகவும் மரியா கூறியுள்ளார். கணவரின் மதுபானத்தில் உறக்க மருந்துகளை கலந்தபின் அவரின் தலையை துண்டித்து கொன்றாராம் மரியா. அதன்பின் பலகை அறுக்கும் கருவியொன்றின் மூலம் சடலத்தை துண்டுகளாக்கி மெக்ஸிகோ சிட்டியின் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். உளவியல் நிபுணரான பெண்ணொருவர் இவ்வாறு தனது கணவரின் தலையை துண்டித்து கொலை செய்யத் தீர்மானித்தமை அதிகாரிகளை வியப்பிலாழ்த்தியுள்ளது. கரேரா கியூலர் கொல்லப்பட்டதை அவருக்கு நெருக்கமானவர்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக கியூலரின் செல்லிடத் தொலைபேசியிலிருந்து அவரின் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் குறுந்தகவல்களை மரியா அனுப்பிவந்தாராம். ஆனால், பூங்காவொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்கள் சிலர் கியூலரின் தலையை கண்டபின் பொலிஸார் நடத்திய விசாரணைகளை ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து மரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.



