விடுதலைப் புலிகளுக்கு நான் பணம் வழங்கவில்லை ....!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் 117 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியதிலிருந்து அவர்கள் பெரும்பான்மையைப் பெறப்போவதில்லையென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு யார் ஆயுதம், பணம் வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். 2005ஆம் ஆண்டு நான் புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால் மூன்று வருடங்களில் அவர்களை முடிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. சமஷ்டிக் கோரிக்கைக்கு நாம் இணங்கப்போவதில்லை. மாகாணசபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பதாயினும் அது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடவேண்டும். அரசியலமைப்பு மாற்றப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு ஜே ஹில்டன் ஹோட்டலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, தலைவர்களான விமல் வீரவன்ச, தினேஷ்குணவர்த்தன, ஜி.எல். பீரிஸ், ரிரான் அலஸ், ரஜீவ விஜயசிங்க, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது:-
2005 ஆம் ஆண்டு எம்மிடம் நாட்டை ஒப்படைத்த போது நாடு எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும் 2015 ஆம் ஆண்டு நாட்டை மீளவும் நான் ஒப்படைக்கும் போது யுத்தத்திற்கும் முடிவைக்கண்டு சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதையில் ஒப்படைத்தேன். கடந்த ஆறு மாதகாலத்தில் நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்குமா?
பதில்:- நாம் 117 ஆசனங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 113 ஆசனங்களுக்கு மேல் நாம் எப்படியும் பெற்று ஆட்சி அமைப்போம்.
கேள்வி:- 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் நிதி வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன?
பதில்:- விடுதலைப் புலிகளுக்கு நான் நிதி வழங்கியிருந்தால் மூன்று வருடங்களில் அவர்களுக்கு முடிவுகட்ட சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. நான் நிதி வழங்கியதாக ரணிலுக்கு பிரபாகரன்தான் கூறியிருக்கவேண்டும். தற்போது பிரபாகரன் இல்லாததால் அதனை கேட்க முடியாது.
விடுதலைப் புலிகள் ஆரம்பித்த காலம் முதல் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன். புலிகளுடன் அண்மித்திருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். நாம் அவர்களுடன் இரு தடவைகள் பேசுவதற்கு முனைந்தோம்.
ஆனால் அவர்கள் மாவிலாறு யுத்தத்தை ஆரம்பித்ததனர். இதனால் அவர்களை முடித்தோம். யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் அதனையும் மீறி ஆரம்பித்தனர். அதனால் முடித்துவிட்டேன்.
புலிகளுக்கு ஆயுதம் பணம் கொடுத்தவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ததற்காக ஆயுதங்கள் நிதி உதவிகள் எவ்வளவு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் அனைவருமே அறிந்துள்ளனர்.
கேள்வி:- நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானால் மூன்று மாதங்களில் விலகிவிடுவீர்கள் என்று கூறப்படுகின்றதே?
பதில்:- யார் அப்படி சொன்னது? உங்களது சொல்லிருந்து நான் பிரதமராவேன் என்பது நீங்கள் ஏற்றுக்கொள்வது தெரிகின்றது.
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கம் அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்தென்ன?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியின் கூற்றிலிருந்து அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது நிரூபணமாகின்றது. நாம் பெரும்பான்மை பலத்தைப் பெற்று வெற்றிபெறுவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஜே.வி.பி.யுடனும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக கூறுகின்றது. இதிலிருந்து அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிகின்றது. தோல்வியை ஏற்றுக்கொண்டமையினாலேயே அவர்கள் அப்படிக் கூறுகின்றனர்.



