Breaking News

எமது சமூகத்தை ஏனைய சமூகங்களுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் சமுதாயமாக மாற்றி விடாதீர்கள் - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

எமது சமூகத்தை ஏனைய சமூகங்களுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் சமுதாயமாக மாற்றி விடாதீர்கள் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார் 

புதிய காத்தான்குடி நூறாணியா பள்ளிவாயலுக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை (07) இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லி வருகின்ற ஒரு விஷயம் இந்தத் தேர்தலிலே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களோடு உடன்படிக்கையைச் செய்து அவரது வேண்டுகோளின் பேரில் அவரது கரங்களைப் பலப்படுத்தி இந்த நாட்டிலே எதிர்வருகின்ற ஆறு ஆண்டுகளுக்கு மிகச் சிறப்பான ஒரு ஜனநாயக ஆட்சியை அவர் கொண்டு செல்வதற்காக வெற்றிலை சின்னத்திலே மைத்திரி அணியிலே போட்டியிடுகின்றோம் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். இது பொய் அவ்வாறு நாங்கள் போட்டியிடவில்லை. மஹிந்தவை பிரதமராக்குவதற்குத்தான் நாங்கள் போட்டியிடுகின்றோம் என்று எமது அன்புக்குரிய எதிர்க்கட்சியினர் சகோதரர்கள் மேடைகளிலே பேசி வந்தார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சிரேஷ்ட ஆலோசகரும் வடமத்திய மாகாண முதலைமச்சருமான பேசல ஜயரட்ண எமது வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

மக்கள் மத்தியில் பொய்யான விடயங்களைச் சொல்லி அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்குக் கிடையாது. மேடைகளைப் போட்டு யாரையும் ஏச வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. கடந்த காலங்களில் எங்களது மக்களுக்கு எங்களால் முடிந்த சகல பணிகளையும் செய்திருக்கிறோம். யுத்த காலத்தில் மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். அதன் பின்னர் அபிவிருத்திகளைச் செய்திருக்கிறோம். ஏதிர்காலத்தில் இதைவிடவும் அதிகமான பணிகளை இந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியுடனும் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடனும் செய்ய இருக்கிறோம். நாம் போட்டிருக்கின்ற அனைத்து கொங்கிறீட் வீதிகளையும் 24 மாதங்களுக்குள் கார்பெட் வீதிகளாக மாற்றவிருக்கின்றோம். அந்தப் பணிக்காக நான்காயிரம் மில்லியன் ரூபாய்க்கான ஒப்பந்தம் சீன அரசாங்கத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. உங்களது குடிதண்ணீர் பிரச்சினையினைத் தீர்த்திருக்கின்றோம். கழிவு நீர்பிரச்சினையினைத் தீர்க்கவிருக்கின்றோம். பாடசாலை, கல்வி, சுகாதாரம் என்று அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்து இந்த நாட்டிலே மிகச் சிறந்த அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாற்றுவோம்.

இவை அனைத்தையும் செய்வதற்கு எமக்கு அதிகாரம் தேவை. அந்த அதிகரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடன் இணைந்து அந்த அணியிலே போட்டியிடுகின்றோம். தொடர்ந்து பொய்களைக் கூறிவருகின்ற எமது சகோதரர்கள் அதனை இந்த நிமிடத்திலிருந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். 

இந்தத் தேர்தலிலே ஒரு கட்சி ஆசனத்தைப் பெறவேண்டுமாக இருந்தால் 43.000 வாக்குகளைப் பெற வேண்டும். நாம் 45.000 வாக்குகளைப் பெறுவதற்காக வேலை செய்து வருகின்றோம்.
இந்தத் தேர்தல்தான் நாம் இறுதியாக வாக்களிக்கும் விகிதாசார முறைத் தேர்தலாகும். இதற்குப் பின்னர் நடைபெறப்போவது தொகுதிமுறை தோர்தலாகும். அதில் நமது மண்ணும் ஏறாவூரும் ஒன்று சேர்கின்ற போதுதான் ஒரு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற முடியும். அதுவும் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட வேண்டும். இரட்டைவாக்குச் சீட்டு முறை நீக்கப்பட வேண்டும். பல விஷயங்களை உள்ளடக்குகின்ற போது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். 

அந்தத் தேர்தல் முறை வருகின்ற போது எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்வதைத் தடுக்கும் வகையில் அதனை பாதுகாக்கும் வகையில் பல்வேறுபட்ட அமசங்களை அந்தத் தேர்தல் திருத்தச் சட்டத்திலே உள்வாங்க வேண்டும். அதற்கான பல பணிகளை நாம் செய்ய வேண்டும். அதற்கு ஆளுமையுள்ளஇ அனுபவமுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது பற்றுள்ள ஒரு தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும். 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வெறுமனே அபிவிருத்திக்கான பிரதிநிதியொருவரை தெரிவு செய்கின்ற தேர்தல் அல்ல. எமது சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகின்ற தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் எமத பிரதிநிதித்துவம் இழக்கப்படுமானால், இந்த அரசியல்யாப்பு இருக்கின்றவரை நாம் துன்பத்தோடும். துயரத்தோடும் வாழ வேண்டும். 

எமது சமூகத்தை ஏனைய சமூகங்களுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் சமுதாயமாக மாற்றி விடாதீர்கள். கடந்த தேர்தலிலட நீங்கள் ஒற்றுமைப்பட்டீர்கள். அதனால் இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற பதவியை இந்த சமுதாயம் பெற்றது. இம்முறை தேர்தலிலும் நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு சகல வேறுபாடுகளையும் மறந்து வாக்களித்து அந்தப் பதவியை மீண்டும் பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
எம்.ஐ.அப்துல் நஸார்