Breaking News

குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் - ஹிஸ்புல்லாஹ் அறிவிப்பு

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் எதிர்வரும் பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தும் விலகத் தயாராகவுள்ளதாக இன்று (03) கயா பேக் ஹவுஸில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கடந்த சில தினங்களாக தேர்தல் பிரச்சாரங்களின் போது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தி வருகிறார். 

பாலமுனையில் எனக்குச் சொந்தமான காணியொன்றை பெருந்தொகைக்கு விற்பனை செய்து இலாபம் சம்பாதித்ததாகவும், அரபு நாடுகளில் இருந்து நோன்பு துறப்பதற்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றார்.

ஷிப்லி பாறூக் அவர்கள் ஒரு படித்தவர். ஒரு பொறியியலாளர். அவர் ஆதாரம் இல்லாமல் எதனையும் கூறியிருக்கமாட்டார். என்மீது அவர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார் என நான் நினைக்கவில்லை. 

எனவே, இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் நிரூபிக்க வேண்டும். எதிர்வரும் 07ஆந் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக குறித்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை ஊடகங்களுக்கு காட்ட வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியாத பட்சத்தில் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அரசியலில் இருந்து விலக வேண்டும். 

அத்துடன் பொறியிலாளர் அப்துல் றகுமான் முஸ்லிம்கள் விடயத்தில் நான் எந்தப் பங்களிப்பையும் பாராளுமன்றத்தில் செய்யவில்லை என குற்றச்சாட்டக்களை முன்வைத்து வருகிறார். நான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் விரைவில் புத்தகமாக வெளிவர இருக்கிறது. சுமார் 900 பக்கம் கொண்ட இந்தப் புத்தகம் முஸ்லிம்களின் தேவைகள், உரிமைகள், பாதுகாப்பு மாற்றும் அபிவிருத்தி பற்றி நான் பாராளுமன்றத்தில் பேசினேன் என்பதற்கான ஆதாரமாகும். 

இதனிடையே, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில், பொறியிலாளர் அப்துல் றகுமான் இந்தத் தேர்தலில் நான் அவருக்கு ஒரு சவால் அல்ல என தெரிவித்திருக்கிறார். நான் அவருக்கு சவால் இல்லையானால் அவருடன் விவாதிப்பதற்கு எமக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
எம்.ஐ.அப்துல் நஸார்