ஓலிபரப்புச் சாதனங்களை பயன்படுத்திச் செய்யப்படும் உள்ளூர் நடமாடும் வர்த்தகமும் அவற்றை சீராக நெறிப்படுத்த வேண்டியதன் அவசியமும்.
வாடிக்கையாளர்களின் காலடிக்கே பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வதென்பது வியாபார வெற்றிக்கான வியூகமாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போட்டி, விற்பனையினை அதிகரித்துக் கொள்ளல், விரைவான வியாபாரம், திரவத் தன்மையுடனான பணப்புரள்வு என்பன அதற்கான உள்ளார்ந்த நோக்கங்களாக இருந்தாலும், வாடிக்கையாளருக்கு இலகுவாகப் பொருட்களைக் கிடைக்கச் செய்தல், அவர்களின் நேர விரயத்தை தவிர்க்க உதவுதல், உரிய நேரத்திற்கு பொருட்களை கிடைக்கச் செய்தல் என்பன வெளித்தோற்ற காரணங்களாக உள்ளன.
முற்காலத்தில் பொருட்களை காவில் வைத்துத் தூக்கிச் சென்று தெருத் தெருவாக கூவி விற்பனை செய்து வந்தனர். தற்போது தொழில்நுட்ப சாதனங்களின் அறிமுகம், வாகனப் பயன்பாடு, நேர்த்தியான வீதிக் கட்டமைப்பு என்பன காரணமாக ஒலிபரப்பு சாதனங்களை பயன்படுத்தி ஒலியெழுப்பியவாறு உள்ளூர் வீதிகளில் வாகனங்களில் வலம் வந்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறான வியாபாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதில் ஒலியெழுப்ப பயன்படும் ஊடகங்கள் தொடர்பிலும் அவ்வாறு ஒலியெழுப்பப்படும் இடங்கள் தொடர்பிலும் கூர்ந்து நோக்கப்பட வேண்டும்.
மார்க்க உபன்னியாசங்கள், சமயப் பாடல்கள் மற்றும் சமய நூல் பாராயணங்கள் போன்றவை வெறுமனே ஒலியொழுப்பும் நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுத்தல் என்பது ஏற்புடைய ஒன்றாக புலப்படவில்லை அதிலும் குறிப்பாக சமய நூல் பாராயணங்கள் ஒலியொழுப்பும் நோக்கத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
வரையற்ற முறையில் மிகச் சத்தமாக ஒலியெழுப்பியவாறு வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலை மற்றும் பாடசாலைகள் போன்ற ஒலியெழுப்பத் தகாத இடங்கள் தொடர்பில் கிஞ்சித்தும் சிந்திக்காது சகட்டு மேனிக்கு சத்தம் ஏற்படுத்துவது மனிமாபிமான மற்ற செயலாகும். ஏனெனில், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோர், நோயாளிகள் கல்வி கற்கும் மாணவர்கள் என பல்வேறு தப்பினரும் இதனால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகும்.
மறுபுறமாக நோக்கும்போது, இவ்வாறான வர்த்தகங்களுக்கு தடைவிதிப்பதோ மாற்றுமுறைகளை கைக்கொள்ள நிர்ப்பந்திப்பதோ இதற்கான தீர்வாக அமையாது ஏனெனில் சிறிய முதலிட்டுடன் சொற்ப இலாபத்தை நம்பி இந்தத் தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அந்த வியாபாரியின் வருமானத்தில் தங்கி வாழும் அவரது குடும்பத்தினரும் வெகுவாகப் பாதிக்கப்படவர் என அவர்கள் சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது.
எவ்வாறெனினும், இந்த ஒலியெழுப்பும் விடயம் தொடர்பில் சில வரையறைகளையும் நெறிமுறைகரளயும் பின்பற்றுவதன் மூலம் அதனால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிதிகூலங்களையும் குறைத்துக்கொள்ள முடியும்.
01. குறிப்பிட்ட டெசிபல் அளவினைவிட ஒலியளவு அதிகரிக்கப்படக் கூடாது என்ற கண்டிப்பான கட்டுப்பாடு.
02. ஒரு தெருவில் தொடர்ச்சியாக ஒலியெழுப்பிச் செல்லாது குறிப்பிட்ட சம இடைவெளித் தூரத்திற்கொரு தடவை ஒலியெழுப்பி வாடிக்கையாளர்களுக்கு வியாபாரியின் வரவை தெரியப்படுத்தல்.
03. இந்த விடயம் சரியாக அமுல்படுத்தப்படுகின்றதா என்ற விடயம் தொடர்பில் கண்காணிப்பினை மேற்கொள்ள சமூக சமய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதோடு சமூக நலன்சார்ந்த விடயமாதலால் இதற்காக பொலீஸாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல்.
வர்த்தகம் செய்யும் அதேவேளை சமூக நலனிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும். சமூகமட்டத்தில் அனைத்துத் தரப்பினராலும் இந்த விடயம் சார்ந்து கரிசனை செலுத்த முடியும். தத்தமது ஆளுமை, அதிகார எல்லை, திறன்கள் என்பவற்றை பயன்படுத்துவதனூடாக ஒரு மாற்றத்தினை செய்ய முடியும்.
எம்.ஐ.அப்துல் நஸார்