Breaking News

லிபியா படகு விபத்து- மேலும் 200 பேர் இறந்திருக்கலாம் என மீட்புக் குழுவினர் அச்சம்

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்த நிலையில் மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக தேடுதல் படையினர் தெரிவித்துள்ளனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 400 பேர் உயிருடன் மீட்கபட்டுள்ளனர். நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 600 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து மீனவப் படகில் கிளம்பியவர்களின் படகு லிபியா அருகே மத்திய தரைக்கடலில் சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த படகு விபத்து அதிகம் பாரம் தாங்காமல் மூழ்கி இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. தகவல் அறிந்து  வந்த இத்தாலியை சேர்ந்த கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. உயிருடன் 400 பேர் மீட்கப்பட்டுள்ளதால், மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கருதப்படுகிறது. மூழ்கியவர்களைத் தேடும் பணியில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், 450 பேர் பலியாகினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி இடையிலான கடற்பகுதியில் நிகழ்ந்த படகு விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.