எமது விமர்சனங்கள் சமூக நலன் சார்ந்தவையாகும் - பொறியியலாளர் அப்துர் றஹ்மான்.
எமது விமர்சனங்கள் சமூக நலன் சார்ந்தவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (31) நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற வெளிச்சம் அரசியல் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெடர்ந்து அவர் பதிலளிக்கையில், தனி நபர்களுக்கு மாலை போடுவது, விழா எடுப்பது, பட்டம் சூட்டுவது, பொன்னாடை போர்த்துவது, அவர்களை தலையில் தூக்கிக்கொண்டு திரிவது இவைதான் அரசியலாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசியல் என்பது மக்களுடைய நலனுக்காகப் பாடுபடுதல், அதற்காக உழைத்தல், அதற்காகப் போராடுதல். இதுதான் அரசியலாகும்.
இந்த அடிப்படையில் இந்த நாட்டிலே நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான அரசியலை நாங்கள் முன்னெடுத்தோம். நல்லாட்சி அரசியலின் வெற்றியினை நாம் காண வேண்டுமாக இருந்தால், மக்கள் நல்லாட்சி அரசியலை ஏற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். மக்கள் நல்லாட்சிகான அரசியலை ஏற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டுமாக இருந்தல், நல்லாட்சி ஏன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இடத்தில் நல்லாட்சிக்கு விரோதமான காரணிகளை நாம் மக்களுக்கு சொல்லியாக வேண்டும். நல்லாட்சிக்கு விரோதமான காரணிகளை மக்களுக்கு சொல்கிறபோது அந்தக் காரணிளுக்குக் காரணமான தனி மனிதர்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சுமூக ஒழுங்கிலே, சமூக வேலைத்திட்டத்திலே இஸ்லாத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்ற விடயம் அடிப்படையானதாகக் காணப்படுகிறது. தீமையை எவ்வாறு தடுப்பது? தீமையை அடையாளப்படுத்த வேண்டும். தீமைக்குக் காரணமானவர்களை, காரணிகளைச் சொல்ல வேண்டும். தீமையிலிருந்து மக்களை விலகியிருக்கச் சொல்ல வேண்டும். நன்மையை ஏற்படுத்த வேண்டும். இப்படிப் படிமுறை இருக்கிறது. இந்த இடத்தில்தான் தீமையினை அடையாளப்படுத்தி தீமைக்குக் காரணமானவர்களை சொல்கிறபோது விமர்சனம் வருகிறது. இது சமூக நலனின் அடிப்படையில் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை மார்க்கமும் தடைசெய்யவில்லை, ஜனநாயகமும் தடை செய்யவில்லை. இந்த நாடும் தடை செய்யவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டின் ஊழல் மோசடிகளைப்பற்றி மிகத் தெளிவாகப் பேசுகிறது. ஊழல் மோசடிகளைப்பற்றி பேசுகிறபோது அதற்குக் காரணமானவர்களை மறைத்துவிட்டுப் பேச முடியாது. மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஒரு அரசியல்வாதி அரசியல் வாழ்வில் எடுக்கின்ற பொது முடிவுகளை நாம் விமர்சிக்கலாம். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவரது குடும்பம், அவரது பிள்ளைகள் விஷயத்தில் விமர்சிப்பது பொது நலனாக மாறாது. இதனை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது.
எனவே, நாம் சொல்கிற சகல விமர்சனங்களும் சமூக நலன்சார்ந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான அதற்கான விழிப்புணர்ச்சியை மக்களுக்குக் கொடுப்பதற்கான விமர்சனங்கள். அவை சமூக நலன்சார்ந்த அரசியல் நலன்சார்ந்த விமர்சனங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
எங்களுடைய சொந்த அரசியல் நலனுக்காக, எங்களது அணியினை நாங்கள் பாதுகாப்பதற்காக நாங்கள் சொல்ல வேண்டிய விடயத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியாது.
இங்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் நலனில் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன பங்களிப்பை செய்தார்கள். இந்த விடயத்தில் நாம் ஆய்வொன்றினைச் செய்தோம். பதினெட்டாவது திருத்தச் சட்டம், அழுத்கம விவகாரம், கெசினோ விடயம், நீதியரசருக்கெதிரான குற்றப்பத்திரிகை, நீதி தொடர்பான விடயங்கள், இந்த நாட்டிலே மதம் தொடர்பான விஷயங்கள், மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் ஹிஸ்புல்லாஹ், பைசர் காசிம், பஷீர் சேகுதாவூத், ஹரீஸ் எம்.பி போன்றோர் பொது நலன்களை, முஸ்லிம்களின் நலநன மையப்படுத்தி பாராளுமன்றத்தில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. சமூக நலன்பற்றி அரசியல் பேசுகின்ற போது இங்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை.
முஸ்லிம் சமூகத்திலே இருக்கின்ற ஒரு பொதுவான பார்வை விமர்சனத்தினுடைய முக்கியத்துவத்தை, விமர்சனத்தினுடைய பாரதூரத்தை இவர்கள் விளங்கிக்கொள்வதாக இல்லை. இது ஒரு பலவீனம். இந்தப் பலவீனத்தை ஏனையவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களது தவறை மறைப்பதற்காக நாங்கள் ஒரு தவறை சமூக ரீதியாக ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகின்றபோது அதனை விமர்சனம் செய்வதாகக் குறிப்பிடுகின்றார்கள். விமர்சனம் தடுக்கப்பட்ட ஒன்றல்ல. சமூக நோக்கில் அதனைச் செய்யலாம். ஆனால் விமர்சனம் என்பது நேர்மையாக தர்மமுள்ளதாக இருக்க வேண்டும். அநியாயமானதாக சோடிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.
தேர்தல் காலங்களில் ஒவ்வொருவரும் மக்களுடைய வாக்குகளை எவ்வாறாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்தற்காக பல கோஷங்களோடு வருகிறார்கள். உரிமைக் கோஷத்தோடு வரகிறார்கள், அபிவிருத்திக் கோஷத்தோடு வருகிறார்கள். இப்போது நல்லாட்சிக் கோஷத்தோடு வருகிறார்கள். சிலர் போலியான நல்லாட்சிக் கோஷத்தோடு பலர் வந்திருக்கிறார்கள்.இதில் மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்திலே ஒரு காலத்தில் உரிமைக்கான அரசியல் சொல்லப்பட்டது பின்னர் அபிவிருத்திக்கான அரசியல் சொல்லப்பட்டது. ஆனால் என்னைப் பொறுத்தவரை உரிமையில்தான் அபிவிருத்தியும் இருக்கிறது. ஏனெனில் அபிவிருத்தித் தேவை என்பது அவர்களின் அடிப்படை உரிமை. இதனை நாம் பிரிக்க முடியாது. அபிவிருத்தியைப் பொறுத்தவரை தனிநபர்களும் அரசியல்வாதிகளுமே அபிவிருத்தி அடைந்திருக்கிறார்களே தவிர பிரதேசங்களும் மக்களும் அபிவிருத்தி அடைந்ததாக இல்லை. உதாரணமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் 17ஆண்டுகளுக்கு முன்னர் மற்றுமொரு தேவைக்காக ஒரு வாசிகசாலை உடைக்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த வாசிகசாலை இன்னும் பிரதியீடு செய்யப்படவில்லை. 17ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாசிகசாலையாவது தற்போது இருந்திருக்க வேண்டும். மக்களுடைய கல்வி வளர்ச்சி மற்றும் அறிவுத் தேவைக்குரிய வாசிகசாலையொன்றை இந்த அபிவிருத்தி கொண்டுவரவில்லை என்ற குறியீடு மக்கள் மத்தியில் இருக்கிறது.
அந்த கடந்த காலங்களில் வகையில் உரிமைகள் தொடர்பில் என்ன செய்தார்கள் அபிவிருத்தி தொடர்பில் என்ன செய்தார்கள் என்பது பற்றிய பங்களிப்பின் அடிப்படையில் மக்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும். நல்லாட்சிக்கான உண்மையான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும்.
அந்த வகையிலே நாங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலே நல்லாட்சிக்காக பத்து வருடங்களுக்கு மேல் குரல் கொடுத்துவந்த பிரதிநிதிகளை நிறுத்தியிருக்கிறோம். ஆதற்கு சாக்களிப்பதன் மூலமாக நல்ல தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற வெளிச்சம் அரசியல் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்து யூ.எல்.எம்.யாகூபினால் நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்



