Breaking News

தொடர்ந்து 22 நாளாக ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிய சிறுவன் பலி

ரஷ்யாவில் தொடர்ந்து 22 நாட்கள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிய 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டர் கேமில் அதிக ஆர்வம் மிக்க ருஸ்டமிற்கு மிகவும் பிடித்தது 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் வீடியோ கேம் தான். போர் அரங்கம் போன்ற பின்னணியில் விளையாட வேண்டிய இந்த கேமில் கற்பனையான எதிரிகளை முறியடித்து கொல்ல வேண்டும். தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் இந்த விளையாட்டை விளையாடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளான் ருஸ்டம். கடந்த மாதம் விளையாட்டில் தோற்ற வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ருஸ்டமுக்கு விபத்து ஏற்பட்டது. இதனால், கால் முறிந்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை. எனவே, வீட்டில் ஓய்வில் இருந்த நேரத்தில் ஆன் லைனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளான். தொடர்ந்து 22 நாட்களாக சாப்பிடும் நேரம், தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் வீடியோ கேம் விளையாடுவதிலேயே செலவழித்துள்ளான் ருஸ்டம். . இந்நிலையில், கடந்த 30ம் தேதி சிறுவனின் அறையில் வீடியோ கேம் விளையாடும் சத்தம் திடீரென வராமல் போகவே, அவனது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவனது அறைக்குள் சென்று பார்த்த போது, சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ருஸ்டமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ருஸ்டமைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ரத்த உறைவால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அச்சிறுவன் கடந்த ஓர் ஆண்டில் குறைந்தது 2000 மணிநேரங்கள், அதாவது சராசரியாக தினமும் 6 மணி நேரத்துக்காவது இதே போல விளையாடி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் தனிமையில் விட்டு விடுவதனால் ஏற்படும் பிரச்சினையே இது, எனவே பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம், சீனாவில் 23 வயது இளைஞர் சுமார் 19 மணி நேரம் வீடியோ கேம் விளையாடி இதே பிரச்சினையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.