Breaking News

8ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வின் ஒரே பார்வை...

8ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வின்  ஒரே பார்வை...
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னியமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது. அந்த நிகழ்வுகளை ஒரே பார்வையில் தருகின்றோம். 
•மு.ப 9.10:  புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகை தந்தனர்.
•மு.ப 9.23: நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைக்குள் வந்திருப்பதற்கான கோர மணி, சுமார் 5 நிமிடங்களுக்கு ஒலித்தது. உறுப்பினர்கள் அனைவரும் அவைக்குள் வந்து தங்களுக்கென ஒதுக்கப்படாத ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். 
•மு.ப 9.29: படைக்கல சேவிதர், செங்கோலுடன் முன்னோக்கிவர நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும் உதவி நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஆகியோர் வருகை தந்தனர். இதன்போது, அவையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர். 
•மு.ப 9.30: ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க வாசித்தார். 
•மு.ப 9.35: ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கரு ஜயசூரிய, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வா அதனை வழிமொழிந்தார். •மு.ப 9.40: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வாவும், புதிய சபாநாயகர் கரு ஜயசூரியவை அக்கிராசனத்துக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். 
•மு.ப 9.42: புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்புக்கு அமைவாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதுடன் பதவிப்பிரமாணமும் செய்துக்கொண்டனர். 
•மு.ப 9.52: புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். அவருடன்  நிமல் சிறிபால டீ சில்வா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். 
•மு.ப 10.11: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பலரும் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யும், புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். 
•மு.ப 10.27: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சுயாதீன உறுப்பினர் என்ற வகையில் வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறியமர்ந்தார். 
•மு.ப 11.43: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதுயுதீன், புதிய சபாநாயகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 
•மு.ப 10.45: பிரிவிதுரு ஹெல உறுமயவின் சார்பில் உதய கம்பன்பில, வாழ்த்து தெரிவித்தார். 
•மு.ப 10.49: நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் உரைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். 
•மு.ப 10.50: புதிய சபாநாயகர் கரு ஜயசூரிய, உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். 
•மு.ப 10.55: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி.யான திலங்க சுமத்திபால பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை நிமல் சிறிபால டீ சில்வா எம்.பி முன்மொழிய, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வழிமொழிந்தார். 
•மு.ப 10.56: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.  அவரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார். 
•மு.ப 10.58: ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அவைத் தலைவராகவும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். •    மு.ப 11.00: நாடாளுமன்றத்தின் காலை அமர்வு, ஜனாதிபதியின் வருகைக்காக மாலை 3  மணி வரையிலும் சபாநாயகரினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 
•பி.ப 2.40 க்கு பொலிஸ் மோட்டார் படை சகிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  அவரது பாரியாரும் வருகைதந்தனர். 
•பி.ப 2.43 அவ்விருவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து இராணுவத்தின் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. 
•பி.ப 2.45 சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் முன்வாயிலுக்கு வந்ததுடன் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது. படைக்கல சேவிதர்கள் அணிவகுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலின் ஊடாக  நாடாளுமன்றுக்குள் சென்றடைந்தார். 
•பி.ப 2.54 மணிவரையிலும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தங்கியிருந்தார். 
•பி.ப 2.59 மணிவரையிலும் கோரமணியொழித்தது. பின்னர் ஜனாதிபதி, சபாநாயகர் அவைக்குள் வருகைதந்தனர். 
•பி.ப.3.00 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கையை விளக்கி அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு சுமார் 35 நிமிடங்கள் சிங்கள மொழியில் மட்டும் உரையாற்றினார். 
•பி.ப 3.35 உரையை நிறைவு செய்துகொண்டு நாடாளுமன்றத்தை விட்டு தனது பாரியாருடன் வெளியேறினார். அவர்கள், வெளியேறியதை படையினர் அறிவித்தனர்.