Breaking News

புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்

புதிய அரசாங்கம் நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்களையும், ஒரு வரவு-செலவுத் திட்ட அலுவலகத்தையும் புதிய அரசியலமைப்பையும் உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நாடாளுமன்றுக்கு புதிய சபாநாயகரை நியமித்தபின் வழங்கிய வாழ்த்துரையின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று தெரிவித்தார்.
தனது நீண்டகால இராஜதந்திர மற்றும் அரசியல் அனுபவங்களை பயன்படுத்தி மேற்கூறிய குறிக்கோள்களை அடைவதற்கு புதிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் பொறுப்பளாராக முக்கிய பங்காற்றுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டினுடைய பாரிய நலன்களை கருத்திற்கொண்டு அரசியற் கட்சிகள் ஒன்றாக வேலைசெய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களில் சிலர், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.
அவர்கள் தங்களுடைய உரைகளில் குறிப்பிட்டவையின் சுருக்கம்...
சமத்துவமாக செயற்படுவார்: நிமல்
புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய சமத்துவமாக செயற்படுவார் என்று தான் நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
சபாநாயகரின் பொறுப்பு குறைவானது: அநுர
மக்களுக்கான சேவையாற்றுவதற்கு உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, புதிய நாடாளுமன்றம் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்காது என்பதால் இந்த சபாநாயகரின் பொறுப்பு குறைவானதாகும் என்றார்.
நேரடியாக செயற்படுவார்: இரா.சம்பந்தன்
புதிய சபாநாயகர் பக்கச்சார்பின்றியும் மற்றும் நேரடியாகவும் செயற்படுவார் என்று தனது வாழ்த்துரையில் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும் தலைவருமான இரா.சம்பந்தன், இல்லாமல் போன ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்புவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தலைமைக்கொடுப்பார்: ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனது வாழ்த்துரையில், நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்தும் முறைமையை முறையாக செய்வார் என்றும் அதற்கு உரிய முறையில் தலைமைத்தாங்குவார் என்றும் கூறினார்.
சின்ன எதிர்க்கட்சி உண்டு: வாசு
நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்க்கட்சியுடன் சிறிய எதிர்க்கட்சியும் இருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசு முறையாக செயற்படும்: அத்துரலிய
வாழ்த்துரையில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், தேசிய அரசாங்கமானது அதன் நடவடிக்கையை முறைப்படி மேற்கொள்ளும் என்றார்.
சேவை அனுபவம் இருக்கிறது: தினேஷ்
புதிய சபாநாயகர் கரு ஜயசூரிய, ஒரு வர்த்தகர், அரச சேவையாளர் மட்டுமன்றி ஓர் அரசியல்வாதி அவர் தன்னுடைய அனுபவங்களை கொண்டு சேவையாற்றுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.