எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தில் இருமுனை போட்டி
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இருமுனை போட்டி நிலவுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலேயே இந்தப்போட்டி நிலவுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து அறுவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எஸ்.பி. திஸாநாயக்க, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரின் பெயர்களே பிரேரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார் வெல்கம ஆகிய இருவருக்கும் எதிர்க்கட்சியில் முக்கிய பதவிகளை வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 56 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவை எதிர்க்கட்சி தலைவராக்குமாறும் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்க்கட்சிகளின் சபைத்தலைவராக நியமிக்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் செவ்வாய்க்கிழமை 2ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கூட்டமைப்பு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. 2ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, கடந்த 2ஆம் திகதி ஆரமான கன்னியமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகிய மூவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.