Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம்.

எந்தவொரு குற்றப்பத்திரிகையும் வழக்குகளுமின்றி சிறைச்சாலையிலுள்ள நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன் எடுக்கப்பட்டது.

சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன் எடுக்கப்பட்டது. சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் சமூக அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர் .

யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிட்சயம் அழுத்தம் கொடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வட மாகாணசபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.