Breaking News

அகதிகள் பிரச்சினை: போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள்

சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து என உள்நாட்டுப்போரால் பாதித்த நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்து வந்தன. இந்த நிலையில், துருக்கியில் அகதிகள் வந்த படகுகள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பச்சிளங்குழந்தைகள் பலியானதில், அய்லான் என்ற குழந்தையின் உடல், கரை ஒதுங்கிக்கிடந்த துயரமான காட்சி, உலகையே உலுக்கியது. அதை தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என பல நாடுகள் அகதிகளை ஏற்க முன் வந்துள்ளன. இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகனில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் வழக்கம்போல நேற்று உரையாற்றி விட்டு, அகதிகள் பிரச்சினை குறித்தும் பேசினார். அப்போது அவர், ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு திருச்சபையும், மத சமூகமும், துறவி மடமும், சரணாலயமும் ஆளுக்கொரு அகதிகள் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார். அதை மக்கள் கைதட்டி வரவேற்றனர். சொன்னதை செயல்படுத்தும் விதத்தில், ‘வாடிகனில் உள்ள 2 திருச்சபைகள், தலா ஒரு அகதி குடும்பத்தை எடுத்துக்கொள்ளும்’ எனவும் அவர் அறிவித்தார்.