கவர்ச்சி நடிகை பாபிலோனா காதல் திருமணம்- 9ம் தேதி சென்னையில்!
கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த கவர்ச்சி நடிகை பாபிலோனா தொழில் அதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 9 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் பாபிலோனா. இவருக்கும் ஆரணியை சேர்ந்த தொழில் அதிபர் சுந்தர் பபுல்ராஜ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து பாபிலோனா-சுந்தர் பபுல்ராஜ் ஆகிய இருவருக்கும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாபிலோனா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி பாபிலோனா-சுந்தர் பபுல்ராஜ் திருமணம் வருகிற 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஆதித்யா ஓட்டலில், கிறிஸ்தவ முறைப்படி நடக்கிறது. ‘‘திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்'' என்று பாபிலோனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.