கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட முன்வாருங்கள் - ஹிஸ்புல்லாஹ் அழைப்பு
கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.
காத்தன்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தன்குடி குர்ஆன் சதுக்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில், என்னைப் பொறுத்தவரையில் யாரும் எந்தவிதமான வேறுபாடுகளையும் வளர்த்துக்கொள்ளக் கூடாது. நமது மக்கள் மத்தியில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், ஆதரவளித்தவர்கள், ஆதரவளிக்காதவர்கள், எதிர்த்தவர்கள் என்று பகைமையை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
அனைவரையும் மன்னிப்போம்
நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், நாங்கள் எல்லோரும் சகோதரர்கள். நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். அல்லாஹூதஆலா மன்னிப்பை மிக சந்தேசமாக ஏற்றுக்கொள்கின்றான். நாங்கள் மன்னிக்க வேண்டும். நாங்கள் எல்லோரையும் மன்னிக்க வேண்டும். அவர்கள் எமக்குச் செய்த அநியாயங்கள், ஏசியது, பேசியது அனைத்தையும் நாம் மன்னிக்க வேண்டும். எல்லாவற்றையும் மன்னித்து நாம் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் ஒற்றுமைப்படுகின்ற போதுதான் எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப முடியும்.
அபிவிருத்திப் பணிகள் தொடரும்
என்னென் வேலைகளை நாம் விட்டோமோ அத்தனை வேலைகளையும் தொடர்வோம். எந்தெந்த அபிவிருத்திப் வேலைகளை நாம் ஆரம்பித்து வைத்தோமோ அத்தனை வேலைகளும் தொடரும். குறிப்பாக மாபெரும் சுவரேஜ் சிஸ்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அதை நாங்கள் இரண்டு வரடத்திற்குள் முடிக்க வேண்டியிருக்கின்றது. அதேபோன்று இன்னும் பல தேவைகள் இந்த மண்ணிலே இருக்கின்றது. நாம் என்ன கற்பனைகளோடு தேர்தல் காலத்திலே இந்த மண்ணிலே இருந்தோமோ அத்தனை பணிகளையும் நாம் செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
வேற்றுமைகளை மறக்க வேண்டும்
ஆகவே நாம் எங்களுக்கிடையே இருக்கின்ற வேற்றுமைகளை மறக்க வேண்டும். நாம் ஒன்றுபட்ட சகோதரர்கள். எதிர்காலத்திலே நாம் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஆகவே நாங்கள் அனைவரையும் மன்னித்து மறந்து செயற்பட வேண்டும். எங்களுக்குள்ளே பகைமையை வளர்த்துக் கொண்டோமாக இருந்தால், எதிர்காலத்திலே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.
தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம்
நந்தமித்ர எக்கநாகக்க, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மகிந்த சமரசிங்க போன்ற முக்கியமான அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த போதிலும் எமக்கு தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
இன்று பாராளுமன்றத்திலே 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். ஒன்று சேர்ந்து சமூகத்திற்கு இருக்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்க இருக்கின்றோம்.
முதலாவது பாரளுமன்றத்தில் உரை
முதல் பாராளுமன்ற அமர்விலே எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் எதிர்க்கட்சியிலே இருக்கின்றோம். எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையில் வியாழக்கிழமை பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எனது பேச்சிலே முதலாவது சொன்ன விடயம் பொதுபல சேனா போன்ற பௌத்த அமைப்புக்கள் தடை செய்ய வேண்டும். அந்த சட்ட மூலம் சபையில் சமர்ப்பிக்க வேண்டும். மலேஷியாவிலே சிங்கப்பூரில் இருப்பதைப் போன்று இன முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற மதத்தை நிந்திக்கின்ற, மத விவகரங்களில் தலையிடுகின்ற அமைப்புக்கள் தடை செய்கின்ற சட்டங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். தொகுதிவாரி பிரதிநிதித்துவம் மூலம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். முஸ்லிம்களுடைய கல்விப் பிரச்சினை, காணிப் பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பாக நீண்ட நேரம் உரையாற்றினேம்.
இப்படி எங்களுக்கு முன்னால் பல சவால்கள் இருக்கின்றன. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்
அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாவும் நாம் பிரிந்துவிடக் கூடாது. நாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் ஒற்றுமைப்படுகின்றபோதுதான் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் எனவும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்த வரவேற்பு நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் சுபைர், காத்தன்குடி நகரசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தன்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பளருமான றஊப் ஏ மஜீட் உட்பட அரசியல் உயர் பீட உறுப்பினர்கள் கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானேர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
எம்.ஐ.அப்துல் நஸார்