தனது ஆடையில் வரைந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியை
நெதர்லாந்து நாட்டில் டெஃபி ஹீர்கென்ஸ் என்பவர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் அறிவியலை மாணவர்களுக்கு மிகப் புதுமையாகச் சொல்லித் தருகிறார். மனித உடல் பற்றிய பாடத்தில் உள்ளுறுப்புகள், எலும்புகள், தசைகள் போன்றவற்றை கரும்பலகையில் வரைவதற்குப் பதில், அவற்றை தனது ஆடையில் வரைந்து, மாணவர்களுக்கு டெஃபி பாடம் நடத்துகிறார். ‘எனக்கு அறிவியல் பாடங்களை படம் வரைந்து விளக்குவதற்குப் பதில், அவற்றை மாணவர்களுக்கு நேரடியாக கற்பிப்பது பிடிக்கும். மனித உடலின் பாகங்களை எப்படி புரிய வைக்கலாம் என்று யோசித்தபோது, மனித உடலுக்குள் இருக்கும் விஷயங்களை ஆடையாக அணிந்து, மாணவர்களுக்கு எளிதில் புரியவைத்தேன். மனித உடல் பாகங்களை உடையாக அணிந்து, மேஜையில் நின்றபடி இது பெருங்குடல், இங்கே இரைப்பை என்று மாணவர்களுக்கு விளக்கியபோது, அவர்கள் ஆர்வமாகக் கவனித்து கேள்விகள் கேட்டனர். நான் எதிர்பார்த்ததைவிட, மனித உடல் தொடர்பான வகுப்பு மாணவர்களிடம் உற்சாகமாகவும் உபயோகமாகவும் அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார் டெஃபி ஹீர்கென்ஸ்.



