நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது இறைவனிடம் நெருக்கமாக இருக்க வேண்டும்.
நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது அல்லாஹ்விடம் நெருக்கமாக இருக்க வேண்டும் அப்போதுதான் கஷ்ட நிலையின்போது அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்கும் என அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் றியாதி தெரிவித்தார்.
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் அதன் தஃவா மற்றும் வழிகாட்டல் பிரிவினூடாக ஹிஜ்ரி 1437 முஹர்ரம் பிறை 10ஆவது தின ஆஷுறா நோன்பினை துறக்கும் விஷேட இப்தார் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24) நிலையத்தின் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் விஷேட மார்க்கச் சொற்பொழிவினை நிகழ்த்தியபோதே இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் றியாதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிர்அவ்ன் மூஸா நபியவர்களுக்கு எதிரியாக செயற்பட்டான், பனூஇஸ்ராயீல்களுக்கு எதிராக செயற்பட்டான், அநியாயம் அட்டுழியம் செய்துகொண்டிருந்தான், நானே இறைவன் என்று கூறினான். கஷ்டம் வந்தபோது, தனக்கு உயிராபத்து வருகிறது என்பதை உணர்ந்தபோது தான் ஈமான் கொள்வதாகக் கூறினான். அல்லாஹுதஆலா அந்த ஈமானை ஏற்றுக்கொள்ளவில்லை.
நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றில் அகப்பட்ட வேளையிலே லாஇலாஹ இல்லா அந்த சுப்ஹானக இன்னீகுந்து மினழ்ழாலிமீன் எனக் கூறினார்கள். அந்த மீன் அவர்களை கரைக்கு வந்து கக்கிவிடுகின்றது. நபி யூனுஸ் (அலை) அவர்கள் அந்த சந்தர்ப்பத்திலே மாத்திரம் அல்லாஹ்வை நினைக்கவில்லை. ஏற்கனவே அல்லாஹ்வின் நினைவோடு இருந்தார்கள். அல்லாஹ்விடம் தொடர்பாக இருந்தார்கள். கஷ்டம் வருகின்ற வேளையிலே அல்லாஹ்வை அழைத்தபோது அல்லாஹுதஆலா அதற்கு பதில் கொடுக்கின்றான்.
பிர்அவ்ன் தானே கடவுள் எனக் கூறிக்கொண்டிருந்தான் நதியிலே மூழ்கடிக்கப்படுகின்ற வேளையிலே நான் ஈமான் கொள்கின்றேன், முஸ்லிமாக மாறிவிடுகின்றான் என கூறுகின்றான். இப்போது அல்லாஹ் அவனை பாதுகாக்கவில்லை, நபி யூனுஸ் (அலை) அவர்களை பாதுகாத்திருக்கின்றான்.
இந்த இரு சம்பவங்களையும் வைத்து நாம் பார்க்கின்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஹதீஸ் மிகத் தெளிவானதாகக் காணப்படுகிறது. 'நீ மகிழ்ச்சியாக, சந்தேசமாக, நிம்மதியாக இருக்கின்றபோது அல்லாஹ்விடம் அறிமுகமாகிக்கொள், உனக்கு கஷ்டம் வருகின்றபோது, துன்பம் வருகின்றபோது அல்லாஹ் உன்னை அறிந்துகொள்வான்'
அதாவது எல்லாம் சிறப்பாக இருக்கிறது, செழிப்பாக இருக்கிறது எந்தப் பிரச்சினையும் இல்லை இந்த வேளையில் அல்லாஹ்வை மறந்து வாழாது அல்லாஹ்விடம் நெருக்கமாகிக்கொள். அவ்வாறு தொடர்பாக இருந்தால் கஷ்டம் வருகின்ற வேளையிலே அல்லாஹ் உனக்கு உதவி செய்வான். நீ நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றபோது அல்லாஹ்வை மறந்து வாழ்கின்றாய், உனக்கு துன்பம் வருகின்றபோது அல்லாஹ்வை அமைக்கின்றாய் அந்த அழைப்புக்கு அல்லாஹ் பதிலளிக்கமாட்டான்.
எனவேதான் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்ற வேளையில் அல்லாஹ்வை நெருங்குகின்றபோது, கஷ்டம் வருகின்றபோது நாம் அவனை அழைத்தால் எமது அழைப்புக்கு அவன் பதில் சொல்லுவான்.
ஆகவே இந்த முஹர்ரம் மாதம் அல்லாஹ்வுடைய மாதம். ஏனைய மாதங்களிலும் நாம் அல்லாஹ்விடம் நெருக்கமாக இருப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகின்ற மாதம். இந்த மாதத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி), செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜீ.எம்.ஜெலீல் (மதனி), காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), மௌலவி ஏ.ஜீ.எம்.அமீன் (பலாஹி) உட்பட உலாக்கள், கதீப்மார்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எம்.ஐ.அப்துல் நஸார்
எம்.ஐ.அப்துல் நஸார்