மட்டக்களப்பு ஆரையம்பதி எல்லை வீதி பகுதியில் விலங்கு எச்சங்களால் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குகின்றனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி –02 பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதி பகுதியில் கழிவு பொருட்களை மற்றும் விலங்குகளின் கழிவு எச்சங்களையும் போடுவதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமக்கு ஏற்படுகின்ற சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி –02 பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதிபகுதியில் தமிழ் , முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இப் பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்கள் ,பாடசாலை மாணவர்கள் , அரச உத்தியோகத்தர்கள் , வாகன சாரதிகள் மற்றும் அருகில் உள்ள ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தும் பிரதான வீதியாகவும் ,நடை பாதையாகவும் ஆரையம்பதி எல்லை வீதியை பயன்படுத்துகின்றனர் .
இந்த வீதியின் ஓரத்தில் பலவருட காலமாக கழிவு பொருட்களையும் , விலங்குகளின் கழிவு எச்சங்களையும் மற்றும் மனித சுகாதார நலத்தினை பாதிக்க கூடிய கழிவுகளை வெளி பிரதேசங்களில் இருந்து கொண்டு வந்து இந்த வீதியின் போட்டு விட்டு செல்வதாகவும் , இங்கு போடப்பட்டுள்ள கழிவுகளை கட்டாகாலி விலங்குகளால் அவைகள் வீதியிலும் மக்கள் வசிக்கின்ற இருப்பிட பகுதிகளிலும், கிணறுகளிலும் எறியப்படுவதனாலும் கழிவுகளில் இருந்து வருகின்ற துர்நாற்றம் மற்றும் விசக்கிருமிகளினால் தமது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோயினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் பலவருட காலமாக இப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இப்பிரதேச மக்களும், பாடசாலை மாணவர்களும், இவ்வீதி ஊடாக பயணிக்கும் பயணிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மழைக் காலங்களில் இந்த வீதி ஊடாக பயணிக்க முடியாமல் மிக மோசமாக நிலையில் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப் பட்ட உயர் அதிகாரிகளுக்கு அரசியல் வாதிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான உரிய நடவடிக்கைகள் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.






