வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ சமரசம்.. தடையை நீக்குகிறது
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன், இந்திய கிரிக்கெட் வாரியம் சமரசமாகப் போக முடிவு செய்துள்ளது. இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த சஸ்பெண்ட் உத்தரை இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெறவுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
இந்தத் தடை நீக்கத்திற்குப் பின்னர் முதலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வரும். கடந்த ஆண்டு பாதியிலேயே நிறுத்தி விட்டுப் போன டூரை தொடர்ந்து முடித்துக் கொடுக்கும். அதன் பின்னர் அடுத்த ஆணடு ஜூன் மாதம் இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும்.
கடந்த ஆண்டு இந்தியாவுடன் விளையாட வந்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கும், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் பாதியிலேயே டூரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 4 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆடியது. டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதனால் கோபமடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம், இரு நாட்டு தொடர்களுக்கு தடை விதித்தது. மேலும் 46 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது
ஆனால் அவ்வளவு பெரிய தொகையை தங்களால் செலுத்த முடியாது என்று மேற்கு இந்தியத் தீவுகள் வாரியம் தெரிவித்தது. இந்த நிலையில் பிசிசிஐ புதிய தலைவராக சஷாங் மனோகர் பதவியேற்றதும், இரு நாட்டு கிரி்க்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தையில் இறங்கின. இதன் விளைவாக தற்போது தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது
மனோகரை, மேற்கு இந்தியத் தீவுகள் வாரிய தலைவர் டேவ் கேமரூன் மற்றும் தலைமை செயலதிகாரி மைக்கேல் முரிஹெட் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இழப்பீடாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய பிசிசிஐ தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.



