Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தும்- முன்னால் மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவாலை எதிர் கொண்டிருந்தது.

அந்த அனைத்து சவால்களையும் முறியடித்து கட்சிக்கு அதிகப்படியான ஆசனங்களை வெண்றெடுக்கும் பொருட்டு அதிகலவிலான வாக்குகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குமாறும் அவ்வாறு வாக்களிக்கப்பட்டு  அவ்வூருக்கு கட்சியினுடாக பாராளுமன்ற ஆசனம் கிடைக்காத பட்சத்தில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என கட்சியின் தேசியத் தலைவர் றஊப் ஹக்கீம் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல ஊர்களுக்குச் சென்று வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

அதற்கமைவாக மக்கள் கட்சித் தலைமையின் வேண்டுகோலை ஏற்று கனிசமான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கியது மாத்திரமின்றி முஸ்லிம் காங்கிரஸின் பரம எதிரிகள் சிலரையும் அத்தேர்தலில் தோற்கடித்து அவர்களது அரசியல் அதிகாரங்களை பறித்து அவர்களை தேசிய அரசியலிலிருந்து ஓரம்கட்டச் செய்தனர்.

அதனால் அவ்வூர்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியினுடாகவும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்யப்பட்டது ஆனால் கட்சி எதிர்பார்த்த இரண்டு தேசியப்பட்டியல் பிரதிநித்துவத்தையும் பெற்றுக் கொண்டது.

அவ்வாறு தங்களது ஊருக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத ஊர்களின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் தெண்டர்கள் அத்தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றினை தங்களது ஊருக்கு வழங்குமாறு கோரி தலைவரின் வீட்டுக்கு படையெடுத்தனர் ஆனால் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு அமைவாக இன்றுவரைக்கும் எந்தவொரு ஊருக்கும் குறித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

மாறாக எந்தவொரு ஊரையும் திருப்திப்படுத்தாத வகையில் பல மாதங்களாகியும் இன்று தேயப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒரு மூலையில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு ஊரும் பயனடையவில்லை.  

தலைவரின் வாக்குறுதியை முழுமையாக நம்பி வாக்களித்த மக்கள் அரசனை நம்பி புறுசனை கைவிட்ட கதையாக இன்று சில ஊர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் நாடலாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது இத்தேர்தலில் தேசியப் பட்டியல் விவகாரம் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எண்பதோடு உள்ளுராட்சி மன்ற வேட்ப்பாளர்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும் என்பதுடன் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்த சில உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் கேள்விக் குறியாகலாம்

அது மாத்திமின்றி தேசியப் பட்டியல் விவகாரம் எதிரணிகளின் பிரச்சாரத்திற்கான பேசும் பொருளாக அமையும் அத்தோடு அது சில சமயங்களில் எதிரணிக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் அதனால் அடிமட்டத்திலுள்ள என்னைப் போன்ற உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் அரசியலிலிருந்து ஓரம் கட்டப்படுவார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது  

அது மாத்திரமின்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடந்த கால தேசியப் பட்டியல் வாக்குறுதியைப் போன்று இம்முறை தேசியப் பட்டியல் வாக்குறுதியை கருதி விட முடியாது தப்பித்துக் கொள்ளவும் முடியாது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைலரும் நன்கு அறிவார் அத்தோடு தேசியப் பட்டியல் விவகாரம் புலிவாலை பிடித்த கதையாக இன்றைய   சூழ்நிலையில் கொடுத்தாலும் பிரச்சினை கொடுக்காவிட்டாலும் பிரச்சினை எது எவ்வாறு இருந்தாலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னால் உறுப்பினர்கள் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதும் மக்களால் ஓதுக்கப்படுவதும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் தேசியப் பட்டியல் சம்மந்தமான இறுதி முடிவிலே தங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.