தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில் முயற்சி அபிவிருத்தி திட்டத்திற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பில்.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில் முயற்சி அபிவிருத்தி திட்டத்திற்கான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பிராந்திய வியாபார மன்றம் அமைத்தல் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை நாடளாவியல் ரீதியில் தொழில் முயற்சி மன்றங்களை உருவாக்கி அந்த மண்டங்களின் ஊடாக தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் வருமான மட்டத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிகளை நடைமுறை படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தொழில் முயற்சியாளர் மன்றம் பிரதேச ரீதியாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பிரதேச செயலக ரீதியாக உருவாக்கப்படுகின்ற தொழில் முயற்சியாளர் மன்றமங்களில் இருந்து மாவட்ட மன்றம் உருவாக்கப்படுகின்றது. இதே போன்று ஏனைய மாவட்ட மட்டத்திலும் மன்றங்கள் உருவாக்கப்பட்டு தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகள், இவர்களை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல்கள், முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
அந்த வகையிலே மட்டக்களப்பு மண்முனை வடக்கு தொழில் முயற்சியாளர்களுக்கான மன்றத்தினை உருவாக்குவதற்கான சம்பந்த பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெறுவதாக பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மண்முனை வடக்கு சமுர்த்தி நிர்வாக முகாமையாளர், மட்டக்களப்பு மாநகர சபை நானாவிதான வரி பகுதி உத்தியோகத்தர், மட்டக்களப்பு சுற்றாடல் உத்தியோகத்தர், கைத்தொழில் வர்த்தக சம்மேளன அங்கத்தவர்கள், பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



