பாலர் பாடசாலை கல்விப் பணியக உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது.
எம்.ஐ.அப்துல் நஸார்
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறியொன்று கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பிரிவினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய நிலையத்தில் நடாத்தப்பட்டது.
பாலர் பாடசாலை கல்விப் பணியக உத்தியோகத்தர்களுக்கு முன்னொருபோதும் இவ்வாறான பயிற்சிகள் எதுவும் வழங்கப்படாதிருந்த நிலையில் அந்தப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகத்தினால் தனது பணியக உத்தியோகத்தர்களுக்கு அலுவலக நிருவாகம், தாபனவிதிக்கோவை மற்றும் நிதிப்பிரமாணங்கள் தொடர்பில் பயிற்சியொன்றினை வழங்கவேண்டுமென திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் திருமதி.கவிதா விஜயகுமார் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டது.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தில் கடமையாற்றும் செயற்பாட்டு பணிப்பாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றினர்.
முதல் நாள் பயிற்சி நெறியில் வளவாளராக பட்டிப்பளை உதவிப் பிரதேச செயலாளர் திரு.நவேஸ்வரனும், இரண்டாம் நாள் பயிற்சி நெறியில் வளவாளராக ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வனசிங்கவும், மூன்றாம் நாள் பயிற்சி நெறியில் வளவாளராக கிழக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளரான என்.ரமேசும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் திருமதி.கவிதா விஜயகுமார் அவர்களிடம் வழிகாட்டலுக்கமைவாக கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பிரிவின் பயிற்சி உத்தியோகத்தர் எம்.கே.சிறிதரன் இந்தப் பயிற்சி நெறியின் இணைப்பாளராக கடமையாற்றியமை குறிப்பித்தக்கது.




