நீங்கள் நசுக்க நினைப்பது என்னையல்ல, எமது நாட்டின் கலாசாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டம்.
தன்னை குறிவைத்து மேற்கொள்ளப்படும் சில போலிப் பிரசாரங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பத்தரமுல்லையில் கருத்துத் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பு இசை நிகழ்ச்சி தொடர்பில் நான் தெரிவித்த கருத்து குறித்து, சமூக வலைத்தளங்களூடாக என் மீது சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. என்னை நசுக்க முற்படுகின்றனர். என்னை நசுக்க முற்படும் அனைவரிடமும் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நீங்கள் நசுக்க முற்படுவது என்னையல்ல. இந்த நாட்டின் கலாசாரத்தை, நமது நாட்டிற்கே உரித்தான மரபுகளை, எமது உரிமைகளை. அவற்றை பலவீனமாக்கவும் அழிக்கவும் முயற்சிக்கின்றனர்.
அவர்கள் கோருகின்ற கலாசார சுதந்திரம் என்ன? ஆடையின்றி வீதியில் செல்லும் சுதந்திரத்தையா கோருகின்றீர்கள்? அது மாத்திரம் தான் குறையாகவுள்ளது. அதனால் தான் கோருகின்றனர். அதனை மறுக்கும்போது, அதனை வழங்குமாறு கோரி என்னை தாக்குகின்றனர். எமக்கு உரித்தானவற்றைப் பாதுகாப்பதற்கும் தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்குங்கள்.
2014 ஆம் ஆண்டிற்கான தேசிய கைவினைப்பொருட்கள் உற்பத்தி விருது வழங்கல் விழா இன்று முற்பகல் பத்தரமுல்ல அபேகம கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற போதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
- A.D.ஷான் -



