பாக்கிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதல்: ஐ.எஸ்.எஸ். தீவிரவாதிகள் 20 பேர் கொன்று குவிப்பு
உலக நாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்போது அந்த இயக்கத்தினர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றி வருகின்றனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் தங்கள் மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்று கூறி வந்தாலும், கடந்த ஆகஸ்டு மாதம் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த நாடு ரகசிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இஸ்லாமாபாத் நகர தலைவர் அமீர் மன்சூர், துணைத்தலைவர் அப்துல்லா மன்சூரி, சிந்து மாகாண தலைவர் உமர் கதியோ உள்ளிட்ட 40 பேர் சமீபத்தில் அங்கு கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு இடையே பாகிஸ்தானை சேர்ந்த பெண்கள் உள்பட 40 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டை போடுவதற்காக ஈராக், சிரியா நாடுகளுக்கு சென்றுள்ளதாக பஞ்சாப் மாகாண சட்ட மந்திரி ரானா சனுல்லா தகவல் வெளியிட்டார். இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகள் ஐ.எஸ்., அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்துவருகிறது.
மேலும், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வேரூன்றி வருவதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் எச்சரித்து வந்தன.
இந்த நிலையில்தான், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின், நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதி கள் பதுங்கி இருந்து, தாக்குதல்கள் நடத்துவதற்கு சதி செய்து வருவதாக அமெரிக்காவுக்கு உளவு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அமெரிக்கா நேற்று அங்கு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
நங்கர்ஹார் மாகாணத்தில் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட பகுதிகளில் ஆளில்லா விமானத்தை அனுப்பி அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. இந்த அதிரடியில் 20 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் மறைவிடங்களும் தகர்க்கப்பட்டன. பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் வளாகங்களும் சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.



