மண்முனை வடக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
மண்முனை வடக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வும் சங்கத்தின் தலைவர் கே. பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இடம்பெற்ற புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் மீண்டும் பழைய நிர்வாக உறுப்பினர்களே நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர் .
அதன்படி தலைவராக கே. பிரபாகரன் , உப தலைவராக எம். சிவானந்தன், செயலாளராக கே. அருணன் ஆகியோருடன் 24 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குடிநீர் வசதியற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்முனை வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிக் குடும்பங்களையும் கணக்கெடுப்புச் செய்து அவர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வித் தகைமை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர் வி. செல்வநாயகம், மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் பி. கலாதேவன், நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் பணிப்பாளர் எல் ஆர் . டேவிட் சமூக சேவைத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி எஸ். கலைவாணி , திருமதி , பி.புஷ்பவேணி மற்றும் மண்முனை வடக்கு எதிர் நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .