Breaking News

மததுவுடன் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை வினோத திருமணங்கள்

பல்வேறு கலாசாரங்களின் சங்கமமாக திகழ்வது இந்தியா. இங்கு திருமணங்களுக்கு எப்போதுமே முதல் மரியாதை உண்டு. இமாச்சல பிரதேசத்தில் ‘லாஹோல்’ மற்றும் ‘ஸ்பிதி’ என்ற மலைப்பகுதிகள் பல கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு விசித்திரமான திருமணங்கள் நடக்கின்றன.

லாஹோல், இயற்கை கருணையுடன் வழங்கிய பரிசு போன்று எங்கும் பச்சைப்பசேல் தோற்றத்தை கொண்டது. அழகிய பள்ளத்தாக்குகள், உயரத்திலிருந்து விழும் அருவிகள் என இயற்கை எழில் நிறைந்த சாம்ராஜ்யத்தை தன்னுள் அடக்கியது. 

அதை அடுத்திருக்கும் ‘ஸ்பிதி’ அதிலிருந்து  முற்றிலும் மாறுபட்டது. அதை  ‘பனிப்பாலைவனம்’ என்று அழைப்பார்கள். அங்கு காணும் இடமெல்லாம் பனிதான். பனியைத்தவிர வேறு எதையும் பார்க்க முடிவதில்லை. எப்போதாவது வெயில் வந்து எட்டிப்பார்த்து செல்லும். என்றாவது ஒருநாள் மழைபெய்யும். மக்கள் தங்களது அன்றாட தண்ணீர் தேவைக்கு பனியை உருக்கித்தான் பயன்
படுத்திக்கொள்கிறார்கள். 

காலம் உருண்டோடி, மக்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையிலும் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும், திருமண சம்பிரதாயங்களும் இன்னும் மாறவில்லை.

இங்கு நடக்கும் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். ஆனால் அதில் மாப்பிள்ளை கலந்து கொள்ளமாட்டார். மாப்பிள்ளையின் இடம் அவரது தங்கைக்கு வழங்கப்படுகிறது. 

மாப்பிள்ளையின் தங்கை ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். பூரண அலங்காரத்தோடு ஊர்வலமாக அழைத்து வரப்படும் அந்த பெண், மாப்பிள்ளைக்கான அடையாளமாக தன்னோடு ஏதாவது ஒன்றை கொண்டு வருவார்.

அவர்கள் வீட்டில் விளைவிக்கப்பட்ட பயிர் வகை அல்லது மாப்பிள்ளையின் மோதிரம் போன்ற ஏதாவது ஒன்று தங்கையிடம் இருக்கும். அதை அவள் பெண் வீட்டாரிடம் காட்டிய பின்பு, அவளை அங்கீகரித்து சகல மரியாதையுடன் ஊர் மக்கள் அழைத்து வருவார்கள். அவள் கம்பீரமாக ஊர்வலத்தின் முன்னால் நடந்துசெல்வாள். ஊரும், உறவும் கூடிச்செல்ல மக்கள் ஆங்காங்கே கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அந்த பனிப்பாலை              வனத்தில் அது ஒரு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

ஊர்வலத்தோடு அவள் பெண் வீட்டிற்கு சென்று, தனது சகோதரனுக்கான பெண்ணை பார்ப்பாள். ஊர் மக்கள் மத்தியில் அந்த பெண்ணை தனக்கு பிடித்திருக்கிறது என்றும், இவள்தான் தனது சகோதரனுக்கான மணமகள் என்றும் அங்கீகரிப்பாள். அவள் பச்சைக்கொடி காட்டிய பின்புதான் சடங்கு சம்பிரதாயங்கள் தொடங்கும்.

ஒரு வேளை தங்கை, ‘தனக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால், என்னவாகும்?’

அவ்வளவுதான், மணவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நின்று           போகும். மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டியதுதான்.

ஸ்பிதி பகுதியில் பல்வேறு இன மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் ஒரு சில பிரிவினர் கந்தர்வ திருமணம் செய்துகொள்கிறார்கள். அது எப்படி நடக்கிறது தெரியுமா?

பெரிய மைதானத்தில் நடைபெறும் திருவிழா போன்ற வைபவத்தில் ஆண்களும் பெண்களுமாய் ஊரார் அனைவரும் ஒன்று கூடுவார்கள். திருமணத்திற்காகவே கூடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்ணும்– ஆணும் பார்வையில் கலப்பார்கள். சைகையில் பேசுவார்கள். பிடித்துப்போய்விட்டால் அவ்வளவுதான், அந்த பெண்ணை, விரும்பும் ஆண் ஒரே தூக்காக தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார். தன் வீட்டில் கொண்டுபோய் அவளை இருத்திக்கொள்வார்.

பெண் தன் வீட்டிற்கு வந்ததும், மாப்பிள்ளை வீட்டார் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் அணியாக திரண்டு பெண் வீட்டுக்கு போவார்கள். பெண் கேட்பார்கள். நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பதெல்லாம் அங்கே கிடையாது.

மணமகனின் குடும்பத்தார் பெண் கேட்க செல்லும்போது நிச்சய தார்த்தம் மற்றும் கல்யாணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட் களையும் கொண்டு போவார்கள். அதில் குறிப்பிடத்தக்கது அவர்கள் குல வழக்கப்படி அவர்களால் தயாரிக்கப்பட்ட மது!

பெண்ணின் குடும்பத்தாரிடம் அந்த மது கலையத்தை கொடுப்பார்கள். பெண்ணின் அப்பா, அதை திறந்து குடித்துவிட்டால் பெண் கொடுக்க சம்மதம் என்று அர்த்தம். திறக்காவிட்டால் விருப்பமில்லை என்று பொருள். 

மது கலையத்தை திறந்து அவர் குடிக்காவிட்டால், அன்றே பெண்ணை கொண்டு போய் மீண்டும் அவள் வீட்டிலே விட்டுவிடுவார்கள். கொண்டு சென்ற எல்லா பொருட்களையும் திரும்ப              எடுத்துவந்துவிடுவார்கள்.

ஆனால் இது முடிவல்ல, தொடக்கம்தான். மீண்டும் வந்து அதே பாணியில் பெண் கேட்பார்கள். ஒருவர் தூக்கிச் சென்ற பெண்ணை வேறுயாரும் தூக்கிக்கொண்டு போகமாட்டார்கள். அதை மீறி தூக்கிச்சென்றுவிட்டால் மோதல் உருவாகும். பெண்ணுக்கு பிடிக்காதவர் யாராவது தூக்கிச் சென்றுவிட்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை அவ்வளவுதான். அதன் பின்பு அந்த பெண்ணால் தான் விரும்பும் வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவளது கல்யாணமே கேள்விக்குறியாகிவிடும்.

பிடிக்காத ஒருவன், ஒரு பெண்ணை தூக்கிச்சென்றுவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண், ‘உன்னோடு என்னால் வாழ முடியாது’ என்று கூறிக்கொண்டு தாய்வீட்டிற்கு வந்துவிடுவாள். அவள் பிறந்த வீட்டிலே இருந்தாலும் வீட்டாரின் விருப்பப்        படியோ, பெண்ணின் விருப்பப்படியோ உடனடியாக வேறு யாருக்கும் மணம் முடித்து வைக்க முடியாது. ஏற்கனவே தூக்கிக் கொண்டு போனவரின் குடும்பத்தோடு பேசி ஒரு சமாதானத்திற்கு வந்த பிறகே பெண்ணுக்கு வேறுமாப்பிள்ளை பார்க்க முடியும்.

இந்த வில்லங்கமான சம்பிரதாயத்திற்கு ‘பரோனி’ என பெயர். இந்த சம்பிரதாயம் புரட்டாசி மாதம்தான் நடக்கும். அவர்கள் திருமணம் செய்ய சிறந்த மாதமாக புரட்டாசியை தேர்வு செய்துவைத்திருக்கிறார்கள்.

இமாச்சலப்பிரதேசத்தின் சில பிரிவு மக்கள் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மணமகள் ஊர்வலமாக செல்வாள். மணமகன் வீட்டிற்கு சென்று அவனை திருமணம் செய்துகொண்டு, ஊர்வலமாக திரும்ப தன் வீட்டிற்கே அழைத்து வருவாள்.