சிரியா அரசு படையின் அதிரடியில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து நகரம் மீட்பு
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சிப்படையினர் தொடர்ந்து 5-வது ஆண்டாக சண்டை போட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அலெப்போ நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கானாசர் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 நாட்களுக்கு முன்பு கைப்பற்றினர்.
இது சிரியா அரசு படைக்கு பின்னடைவாக அமைந்தது. ஏனென்றால் அலெப்போ நகருக்கு கானாசர் நகரம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த நகரம், ஐ.எஸ். தீவிரவாதிகள் கைகளுக்கு சென்றதால், அரசு படையினர் அலெப்போ செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷியாவின் போர் விமானங்கள் ஒரு பக்கம் குண்டு மழை பொழிந்தன. இன்னொரு பக்கம் அரசு படையினர் கடுமையாக சண்டையிட்டனர்.
அதன் முடிவில் கானாசர் நகரத்தை அரசு படையினர் மீட்டனர்.



