உலகக்கிண்ண 'டி-20' போட்டிகளை டெல்லியில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம் பெப்ரவரி 8 அன்று
நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண டி-20 தொடரின் போட்டிகளை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் அனுராத் தாகூர் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண டி-20 தொடரின் இரையிறுதிப் பொட்டி உள்ளிட்ட நான்கு போட்டிகள் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. எனினும் டெல்லி கிரிக்கட் சங்கம் மீதுள்ள முறைகேடு வழக்கு காரணமாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது.
இந்நிலையில் டெல்லி கிரிக்கட் சங்கம் மத்திய அரசிடம் அனுமதி பெற்றால் மாத்திரமே உலகக்கிண்ண போட்டிகள் டெல்லி பெரோஷா கோட்லாவில் நடத்தப்படும் என அனுராத் தாகூர் முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் அவரால் வழங்கப்பட்ட கால அவகாசத்தினுள் டெல்லி கிரிக்கட் சங்கத்தினால் மத்திய அரசிடம் அனுமதி பெற முடியவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் உலகக்கிண்ண போட்டிகளை நடத்துவதற்கு டெல்லி மத்திய அரசின் காணி மற்றும் அபிவிருத்தி அலுவலகம் நேற்று (வெள்ளிக்கிழமை) தடையில்லா சான்றிதழை வழங்கியது.
அதனையடுத்து பெரோஷா கோட்லாவில் திட்டமிட்டபடி உலகக்கிண்ண போட்டிகளை நடத்துவதா? இல்லையா என்பது குறித்து பெப்ரவரி 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



