அமெரிக்காவில் வெள்ளம் ; 6 பேர் பலி
அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்திய பெண் என்ஜினீயர் உள்பட 6 பேர் பலி பலியானார்கள்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரான ஹூஸ்டனில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
இந்த வெள்ளத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர், இந்தியப்பெண்ணான சுனிதா சிங் (வயது 47) ஆவார். இவர் அங்கு பெக்டெக் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்தில் மூத்த மின்சார என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, காரோடு அடித்து செல்லப்பட்டார். இதில் அவர் காரிலேயே பிணமானார். சுனிதாவுக்கு கணவரும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து அவரது கணவர் ராஜீவ் சிங் கூறுகையில், ‘‘ என் மனைவி காலை 6.50 மணிக்கு செல்போனில் என்னை அழைத்தார். நான் ஆபத்தில் இருக்கிறேன்’’ என கூறினார். ஆனால் அவருக்கு உதவி கிடைத்து விடும் என கருதினேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார் என்பது தெரியவந்தது’’ என்றார்.



