Breaking News

சவுதி அரேபியா - ஏமனில் பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் மரணம் !

சவுதி அரேபியா மற்றும் ஏமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர்.

சவுதிஅரேபியாவில் வழக்கத்துக்கு மாறாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் ரியாத், கெயில், மெக்கா, மதீனா, அல்-பாகா, ஆசிர், நஜ்ரான், ஜகான் ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே, அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இங்கு இதுவரை 915 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அல்-பாகா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கிய 27 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

சவுதிஅரேபியாவில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே பலத்த மழை காரணமாக ரியாத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் வடக்கு பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் சனாவுக்கு வடக்கேயுள்ள அம்ரான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர்.

ஹஜ்ஜா மாகாணத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இந்த 2 மாகாணங்களிலும் மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

அல்-மாகவித் மாகாணத்தில் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகள், பாலங்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. சவுதி அரேபியா மற்றும் ஏமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழைக்கு 2 பேர் பலியாகினர். அங்கு தென் பகுதிக்கான அனைத்து ரெயில்களும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.