தி ஜங்கிள் புக்... படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ 10 கோடி.. மூன்று நாட்களில் ரூ 40 கோடி!
வெளியான முதல் நாளிலேயே த ஜங்கிள் புக் அனிமேஷன் படம் ரூ 10 கோடியை வசூலித்துள்ளது. 'த ஜங்கிள் புக்' படம் வெளியான முதல்நாளில் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் கார்ட்டூன் வடிவில் டிவியில் வெளியான கதை, 'த ஜங்கிள் புக்'. இப்போது அதை நவீன முறையில் அனிமேஷன் வடிவில் படமாக்கியுள்ளனர். இந்தப் படம்,உலகம் முழுவதும் வரும் 16ம் தேதி தான் ரிலீசாக இருக்கிறது.
ஆனால் இந்திய காடுகளில் கதை நடப்பதாலும் படத்தில் மோக்லி கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் நீல்சேத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதாலும்,ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இந்தியாவில் ரிலீஸ் செய்தனர்.
ஒரு காட்டுக்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை, விலங்குகள் எடுத்து வளர்க்கின்றன. அவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் அவனைக் காப்பாற்றுவது தான் படம்.
ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு,இந்தி மொழிகளில் ரிலீசாகியுள்ள இப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்திருப்பதால்,வெளியான முதல் நாளில் 9.76 கோடியை வசூலித்துள்ளது.
ஒரு நேரடி இந்தியப் படம் கூட சாதிக்காத சாதனை இது. தமிழ், ஆங்கிலம், இந்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் அடுத்தடுத்த இரு தினங்களில் மேலும் ரூ 30 கோடிகளைக் குவித்துள்ளது. இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.