நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் தப்பியது பிரேசில்
45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே, ‘பி’ பிரிவில் ஹைதி, பெரு, பிரேசில், ஈகுவடார், ‘சி’ பிரிவில் ஜமைக்கா, வெனிசுலா, மெக்சிகோ, உருகுவே, ‘டி’ பிரிவில் பனாமா, பொலிவியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் ‘பி’ பிரிவில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த ஒரு ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, ஈகுவடாருடன் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (65 சதவீதம்), கச்சிதமாக கடத்தி கொடுப்பதிலும் பிரேசில் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் ஈகுவடார் அணியினர் தாக்குதல் பாணியை தொடுத்து பிரேசில் வீரர்களுக்கு நெருக்கடி தந்தனர். முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
பிற்பாதியில் 66-வது நிமிடத்தில் ஈகுவடார் வீரர் மில்லர் போலனோஸ் இடது புறம் ஓரத்தில் இருந்து ஓங்கி உதைத்த பந்து பிரேசில் கம்பம் நோக்கி பாய்ந்தது. பிரேசில் கோல் கீப்பர் அலிசன் எளிதாக அதை பிடித்திருக்க வேண்டியது. ஆனால் பந்து அவரது கைகளில் பட்டு நழுவி வலைக்குள் சென்றது.
வெளியில் இருந்த ஈகுவடார் வீரர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அது விதிமுறைக்குட்பட்ட கோல் அல்ல என்று கூறி உதவி நடுவர் நிராகரித்தார். அதாவது மில்லர் போலனோஸ் உதைப்பதற்கு முன்பாகவே பந்து மைதான கோட்டை (லைன்) விட்டு வெளியே சென்று விட்டதாக நடுவர் கூறினார். இதனால் ஈகுவடா வீரர்கள் மிகுந்த ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தனர். அவர்களின் ஆதரவாளர்கள் நடுவருக்கு எதிராக கரவொலி எழுப்பினர். டி.வி. ரீப்ளேயில் பந்து லைனை தாண்டியதா? இல்லையா? என்பதை மிக துல்லியமாக காண முடியவில்லை. இந்த சர்ச்சையில் சில நிமிடங்கள் களத்தில் பரபரப்பு நிலவியது.
இதன் பின்னர் 83-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அந்த அணி வீரர் லுகாஸ் மோரா தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று விலகி சென்று விட்டது. முடிவில் இந்த மோதல் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. ஒலிம்பிக்கு போட்டியில் விளையாடுவதற்காக தற்போது ஓய்வில் இருக்கும் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த ஆட்டத்தை நேரில் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஈகுவடார் தலைமை பயிற்சியாளர் கஸ்டாவோ குயன்டெரோஸ் கூறுகையில், ‘சர்ச்சைக்குரிய அந்த காட்சியை 25 முறை வீடியோவில் பார்த்து விட்டேன். பந்து முழுமையாக அதாவது 65 சதவீதம் லைனை கடக்கவில்லை. 50 மீட்டர் தூரத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த போதிலும் கூட உதவி நடுவர் (லைன் நடுவர்) அது கோல் இல்லை என்று உறுதிப்பட கூறுகிறார். எங்களுக்குரிய முடிவை அவர் செல்லாததாக மாற்றி விட்டார். அவரது தவறான முடிவால் நாங்கள் கோபத்தில் இருக்கிறோம்’ என்றார்.
பிரேசில் பயிற்சியாளர் துங்கா கூறும் போது, ‘எனது கோணத்தில் இருந்து போலனோஸ் ஆடிய பகுதியை துல்லியமாக பார்ப்பது என்பது கடினம். ஈகுவடார் வலுவான அணி. அவர்களுக்கு எதிராக எங்களது வீரர்கள் ஆடிய விதம் திருப்தி அளிக்கிறது. தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம்’ என்றார்.
முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான ஹைதியை தோற்கடித்தது. பெரு அணியில் வெற்றிக்குரிய கோலை 61-வது நிமிடத்தில் பாலோ குயர்ரோ தலையால் முட்டி போட்டார். கோபா அமெரிக்கா தொடரில் இது அவரது 11-வது கோலாகும்.
ஒட்டுமொத்த சர்வதேச அளவில் அவரது 27-வது கோலாக இது பதிவானது. இதன் மூலம் பெரு வீரர்களில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை டிபிலோ குபில்லாசிடம் இருந்து குயர்ரோ தட்டிப்பறித்தார். பிரேசில் அணி தனது அடுத்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் ஹைதி அணியை வருகிற 8-ந்தேதி சந்திக்கிறது.
‘ஏ’ பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் கோஸ்டாரிகா-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டமும் கோல் இன்றி டிரா ஆனது.



