Breaking News

நம்வசமுள்ள ஹிலாரி கிளிண்டனின் ரகசிய இமெயிலை பகிரங்கமாக வெளியிடவும்; பூட்டின் !

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முதலாவது பதவிக்காலத்தில் (2009-13) வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஹிலாரி கிளிண்டன் (வயது 68). முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான இவர் தனது பதவிக்காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இமெயில்களை தனியார் இணையதள சர்வரை பயன்படுத்தி எழுதி உள்ளார். 

ஒரு நாட்டின் முக்கியத்துறையின் மந்திரியாக பதவி வகித்துக்கொண்டு, அரசு அலுவல்களுக்கு தனியார் இணையதள சர்வரை ஹிலாரி பயன்படுத்தியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மரபை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஹிலாரியின் இமெயில்களை மாதம்தோறும் வெளியிட உத்தரவிட்டது. 

வரும் நவம்பர் மாதம் அங்கு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட தீவிரமாக உள்ள  ஹிலாரிக்கு இந்த இமெயில் விவகாரம் பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. அவரது அரசியல் எதிரிகள், இந்த விவகாரத்தை அவருக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டன் எழுதிய பத்தாயிரத்துக்கும் அதிகமான இமெயில்களை ரஷியா நாட்டின் உளவுத்துறையினர் ஊடுருவி தகவல்களை திரட்டி வைத்துள்ளனர். அவற்றில் சில இமெயில்களில் மிகமிக ரகசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், ஹிலாரி கிளிண்டனின் முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய இமெயில்களை பகிரங்கமாக வெளியிடுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டு உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.