Breaking News

ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ‘பொருளாதார பேரிடர்’ நடவடிக்கையில் இறங்கும் ரியோ மாநிலம்

பிரேசில் நாட்டில் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. அதன்பிறகு செப்டம்பர் 7 முதல் 18-ந்தேதி வரை பாராஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு மிகப்பெரிய தொடரும் பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற இருக்கிறது.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் தென்அமெரிக்கா நாடு என்ற பெருமையை பிரேசில் பெற இருக்கிறது. இருந்தாலும், பிரேசில் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொருளாதாரம் சீராக இல்லை. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு கோடிக்கணக்கி்ல பணத்தை செலவழித்துள்ளது.

இந்நிலையில் போட்டி தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் போட்டிக்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால் ரியோ மாநிலம் இந்த நிதிச்சுமையை சமாளிக்க, ‘பொது பேரிடர் மாநிலம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரியோ மாநில பொறுப்பு கவர்னர் பிரான்சிஸ்கோ டொர்னெல்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘ஒலிம்பிக் போட்டி விரைவில் வர இருப்பதால் மக்களின் அத்தியாவசிய பொதுச் சேவைகளில் அவசரக்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடருக்கு பிரச்சினை ஏற்பட்டால் நாட்டின் நன்மதிப்பை காயப்படுத்தும்’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்றவற்றை கொடுப்பதில் கடுமையான சிரமம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் மசகு எண்ணெயின் விலை சரிவால் ரியோ நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ரியோ மாநிலம் போலீஸ், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பாக்கி வைத்துள்ளது.

இந்த வருடத்திற்கான ரியோ மாநில பட்ஜெட்டில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நிதிபற்றாக்குறை இருப்பதாக காட்டியுள்ளது. எண்ணெய் மூலம் அதிக அளவில் வருமானம் பெற்ற ரியோ, இந்த வருடம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில்தான் வருமானம் பெற்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.