Breaking News

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் தாக்குதலில் ISIS தலைவர் பாக்தாதி பலி?

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் பாக்தாதி பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி.

இவர், சிரியாவில் ராக்கா நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் பலியாகி விட்டதாக துருக்கி அரசு ஆதரவு நாளேடு ‘ஏனிஸ் சபாக்’ திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவு பெற்ற ‘அல் அமாக்’ என்ற அரபு செய்தி நிறுவனத்தின் தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

‘அல் அமாக்’ வெளியிட்டுள்ள செய்தியில், “ரமலான் மாதத்தின் 5-வது நாளில், ராக்காவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டு விட்டார்” என கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படைகள் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

முன்னதாக திங்கட்கிழமையன்று ஈராக் டி.வி. சேனல் ‘அல் சுமேரியா’, “ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகருக்கு (ஈராக்) 65 கி.மீ மேற்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் பாக்தாதி படுகாயம் அடைந்தார்” என செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

இந்த அபுபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர்  விலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.