Breaking News

அரை இறுதிக்குள் நுழைவது யார்?

15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று(7) நள்ளிரவு வில்லெனிவி டி அஸ்க் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது கால்இறுதியில் பெல்ஜியமும், வேல்ஸ் அணியும் மோதுகின்றன.

1980-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதியை எட்டும் முனைப்பில் உள்ள பெல்ஜியம் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதே சமயம் அறிமுக அணியான வேல்சும் லேசுப்பட்டதல்ல. அந்த அணியின் தடுப்பாட்டம் வலுவாக இருக்கிறது. வேல்ஸ் முன்னணி வீரர் காரெத் பாலே இதுவரை 3 கோல்கள் போட்டு அசத்தி இருக்கிறார். வேல்ஸ் பயிற்சியாளர் கோல்மான் கூறுகையில், ‘பெல்ஜியம் நிறைய ஐரோப்பிய போட்டிகளில் அனுபவம் பெற்ற அணி. நாங்கள் முதல்முறையாக ஐரோப்பிய தொடரில் விளையாடுகிறோம். இதனால் எங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள். பெல்ஜியம் வெற்றி பெற்று விடும் என்று தான் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் கால்பந்தில் எதிர்பார்ப்பது போல் எல்லாம் நடப்பதில்லை’ என்றார்.

பெல்ஜியம் கேப்டன் ஈடன் ஹசார்ட் கூறும் போது, ‘வேல்ஸ் சாதுர்யமாக ஆடக்கூடிய ஒரு அணி. தகுதி சுற்றில் அவர்களுக்கு எதிராக ஆடியிருக்கிறோம். அப்போது கோல் அடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒருங்கிணைந்து கட்டுக்கோப்புடன் ஆடுகிறார்கள். பாலே போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதே நேரம் எங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை’ என்றார்.