ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்ய படகு வீரர்கள் 28 பேரில் 22 பேருக்கு தடை : வீரர்களின் ஊக்கமருந்து பாவனைக்கு ரஷ்ய அரசும் உடந்தை !
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு முழுமையாக தடையில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஷிய தடகள அணி, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள கூட்டமைப்பு தடை விதித்தது.
அதனை எதிர்த்து ஸ்விட்சர்லாந்தின் லாசனில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ரஷியா மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த விளையாட்டு தீர்ப்பாயம், ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.
மேலும் சர்வதேச தடகள கூட்டமைப்பின் விதிமுறைப்படி, அந்த கூட்டமைப்பினால் இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதியில்லாதவர்கள் என்பது சரியான முடிவுதான் என்று கூறப்பட்டது.
ரஷ்யாவிலிருந்து 387 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றிருந்தனர். ஊக்க மருந்து சர்ச்சையை அடுத்து ஒட்டு மொத்த வீரர்களும் பங்கு பெற முடியாது என்ற கருத்து நிலவி வந்தது.
இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு முழுமையான தடையில்லை என்றும் ரஷ்யாவை சேர்ந்த தடகள வீரர்களை மட்டுமே தடை செய்துள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாகவும் நேற்று தகவல் வெளியாகியது.
இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மொத்தமுள்ள ரஷ்ய படகு வீரர்கள் 28 பேரில் 22 பேருக்கு தடை விதிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. 6 பேர் மட்டும் அதில் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.



