பகிடிவதை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: 3 மாணவிகள் உள்பட 6 பேர் கைது
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், செரன்டத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் அறிவியல் வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஹசினாஸ் ஹமீத் என்ற 19 வயது இளம்பெண் கடந்த 23-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவரது உறவினர், கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவிகள் ராகிங் செய்ததால் ஹசினாஸ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஹசினாஸ் படித்துவந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் 3 மாணவிகள் மற்றும் 3 மாணவர்களை நேற்று மாலை கைது செய்த போலீசார் அவர்களை நீதிபதியின் முன் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கடந்த மாதம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் நுண்ணுயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை ராகிங் செய்த சகமாணவர்கள் அந்தப் பெண்ணை ‘பெனாயில்’ குடிக்க வைத்து, ராகிங் செய்த சம்பவம் நினைவிருக்கலாம்.



