ஒரு சப்பாததுடன் மொத்த தூரத்தையும் ஓடி முடித்து அசத்திய எத்தியோப்பியா வீராங்கனை!
ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் ஒரு வித்தியாசமான காட்சியை ரசிகர்கள் காண நேரிட்டது.
சனிக்கிழமை நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் எத்தியோப்பியாவின் எடனேஷ் டிரோ, ஒரு ஷூவுடன் போட்டியின் பாதி தூரத்தை கடந்தது அனைவரையும் அசர வைத்து விட்டது.
விட்டு விடக் கூடாது என்ற வெறியுடன் அவர் ஒற்றை ஷூவுடன் ஓடி போட்டி தூரத்தை கடந்த விதம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
மகளிர் ஸ்டீபிள்சேஸ்
ஒலிம்பிக்கில் சனிக்கிழமையன்று மகளிர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடந்தது. அதில் இந்தியாவின் லலிதா பாமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில்தான் எடனேஷுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.
பாதியில் அறுந்து போன ஷூ
இந்தப் போட்டியில் பங்கேற்றபோது இரு வீராங்கனைகளுடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவரது ஷூ அறுந்து போனது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் டிரோ. இருப்பினும் அவர் அடுத்து செய்ததுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
தொடர்ந்து ஓடினார்
ஒரு ஷூவை மட்டும் போட்டபடி அவர் மீதத் தூரத்தையும் ஓடிக் கடந்து அனைவரையும் அசரடித்து விட்டார். வழக்கமாக அவர் ஓடும் நேரத்தை விட 20 விநாடி குறைவாக ஓடி போட்டி தூரத்தை முடித்தார். இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டியில் தோல்வி
ஆனால் இறுதிப் போட்டியில் இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதில் பஹ்ரைனுக்கு முதலிடம் கிடைத்தது. கென்யா, அமெரிக்கா அடுத்தடுத்து இடங்களைப் பிடித்தன. இந்தியா 10வது இடத்தைப் பிடித்தது. டிரோவுக்கு 15வது இடமே கிடைத்தது.
லண்டனில் அசத்தியவர்
டிரோ, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்தவர் ஆவார். இந்த முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது கிடைக்கவில்லை. ஆனால் ஒரு ஷூவுடன் ஓடிய அவரது விளையாட்டு வேகத்தால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்.