Breaking News

இந்தியாவில் வெறும் 5 பைசாவுக்காக.. 41 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு... இதுவரை 5 லட்சம் செலவு!

டெல்லி: டெல்லியில் வெறும் 5 பைசாவுக்காக கடந்த 41 ஆண்டுகளாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கிற்காக சம்பந்தப்பட்ட கண்டக்டரும், டெல்லி போக்குவரத்துக் கழகமும், இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்

டெல்லியில் கடந்த 1973-ம் ஆண்டில் நடத்துநராக பணியாற்றியவர் ரன்வீர் சிங் யாதவ். இவர் சம்பவ தினத்தன்று ஒரு பெண் பயணியிடம் 10 காசுகள் டிக்கெட்டுக்கு, 15 காசுகள் வாங்கியுள்ளார். மீதமுள்ள 5 பைசாவை கணக்கில் காட்டாமல் அவர் வைத்துக் கொண்டார்.

ஆனால், அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே பயணச்சீட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக் கொண்டார் ரண்வீர். இதனால் ரன்வீருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில், போக்குவரத்துக் கழகத்துக்கு, ரண்வீர் 5 பைசா நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, 1976-ம் ஆண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இதை எதிர்த்து, தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ரன்வீர்.

இந்த வழக்கில் ரன்வீருக்கு 1990-ம் ஆண்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் இவ்வழக்கில் ரண்பீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 6 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது. எனினும், இதை எதிர்த்து, டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக கடந்த 41 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிந்தபாடில்லை. இந்த வழக்கிற்காக டெல்லி போக்குவரத்துக் கழகமும், ரன்வீரும் இதுவரை சுமார் 5 லட்சம் செலவு செய்துள்ளனர்.

தற்போது 5 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லாத சூழலில், 41 ஆண்டுகளுக்கு முந்தைய சில்லறை பிரச்சினையால் இன்னமும் நீதிமன்றப் படியேறி வருகிறார் தற்போது 73 வயதாகும் ரன்வீர்.