குரு பெயர்ச்சி பலன்கள் - மீனராசி
பிறரின் குறைகளை குறைத்துப் பார்ப்பதுடன், நிறைகளை நிறைவாகப் பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஒரளவு அடிப்படை வசதி, வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! சங்கடங்களையும், சச்சரவுகளையும் தருவாரே! என்று கலங்காதீர்கள். அதன்படி எதிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.
அவ்வப்போது நெருக்கடிகள், தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதியும் தர வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. சகட குருவாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவு, டென்ஷன், எதிர்ப்பு, உடல் நலக்குறைவுகள் என வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.
ஒரு கடனை அடைக்க மற்றொரு இடத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். தலைச்சுற்றல், நெஞ்சு எரிச்சல், நீரிழிவு நோய் வரக்கூடும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். மனைவிக்கும் கர்பப்பை சம்பந்தப்பட்ட ஃபைப்ராய்டு, நீர் கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்னைகள் வந்துப் போகும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்.
உங்களது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கழிவு நீர் அடைப்பு, கூடுதல் அறை கட்டுவதற்காக வீட்டை இடித்து மாற்றுவீர்கள். சிலர் நீங்கள் முன்பு போல் இல்லையென்றும் மாறி விட்டதாகவும் கூறுவார்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் இதமாகப் பேசி காரிய சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆரோக்யம் சீராகும்.
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப் போன உங்கள் மகளின் கல்யாணத்தை பிரபலங்களின் முன்னிலையில் நடத்துவீர்கள். பாதியிலேயே நின்று போன கட்டிட வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.



