Breaking News

பாகிஸ்தானில் கலவரம் டி.வி.நிலையத்துக்கு தீவைப்பு !!

பாகிஸ்தானில் முத்தாகிதா குவாமி இயக்கம் என்ற அரசியல் கட்சி உள்ளது. இதன் தலைவர் அல்டாம் உசேன் லண்டனில் தங்கிய படி பாகிஸ்தானில் இக்கட்சியை நடத்தி வருகிறார்.

இவரைப்பற்றி பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் டி.வி. சேனல்கள் அவரது டெலிபோன் பேச்சை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டன.

அதில் ‘ஏஆர்ஓய் நியூஸ்’ என்ற தனியார் டி.வி. சேனல் ஒன்று முத்தாகிதா குவாமி தலைவரின் பேச்சை திரித்து அவதூறாக ஒளிபரப்பியதாக இந்த டி.வி. சேனல் மீது அக்கட்சி தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

பின்னர் கராச்சியில் உள்ள அந்த தனியார் டி.வி. சேனல் அலுவலகத்துக்கு கும்பலாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறி கலவரமானது.

டி.வி. அலுவலக பாதுகாவலரின் துப்பாக்கி பறிக்கப்பட்டது. அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. பின்னர் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகத்துக்கு உள்ளே புகுந்து மேஜை, நாற்காலி மற்றும் ஒளிபரப்பு கருவிகளை அடித்து  நொறுக்கினர்.

எனவே வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பின்னர் ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பலர் காயம் அடைந்தனர்.

அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த போது ஒரு கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை சிறைபிடித்தனர். அவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர்.

தகவலறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டனர். இதற்கிடையே, இத்தாக்குதலில் தங்கள் கட்சி தொண்டர்கள் ஈடுபட வில்லை என முத்தாகிதா குவாமி கட்சியின் சீனியர் தலைவர் சையத் அலி ரஷா அபிடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சிதொண்டர்கள் எப்போதும் அமைதியாகவே போராட்டம் நடத்துபவர்கள். அவர்களுக்கு இடையே மர்ம வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். மற்றொரு தலைவரான வாசே ஜலில் கூறும்போது:-

அமைதியாக போராட்டம் நடத்திய தொண்டர்கள் மீது போலீசார் தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினார்.